This Article is From Jan 04, 2019

சபரிமலை போராட்டம்: இதுவரை வன்முறையில் ஈடுபட்டதாக 1369 பேர் கைது!

தொடர்ந்து வெடித்த வன்முறை தொடர்பாக இதுவரை 1369 போராட்டக்காரர்கள் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

சபரிமலை போராட்டம்: இதுவரை வன்முறையில் ஈடுபட்டதாக 1369 பேர் கைது!
Sabarimala:

சபரிமலை சன்னிதானத்தில் நடுத்தர வயதுள்ள இரண்டு பெண்கள் தரிசனம் செய்ததை தொடர்ந்து வெடித்த வன்முறை தொடர்பாக இதுவரை 1369 போராட்டக்காரர்கள் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 717 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதில், பந்தளத்தில் ஏற்பட்ட சண்டையில் வலதுசாரி ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கைதான இரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களும் அடங்குவர்.

இரண்டு பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் சென்றதையடுத்து, பல்வேறு இந்து அமைப்புக்களால் கேரளாவில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து வெடித்த வன்முறை தொடர்பாக இதுவரை 801 வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த புதனன்று நாற்பது வயதுடைய பிந்து, கனகதுர்கா எனும் இரு பெண்கள் யாரும் எதிர்பாராத வேளையில் அதிகாலை 3.45 மணி அளவில் சபரிமலை கோவிலுக்குள் நுழைந்தனர். காவலர்கள் துணையுடன் சென்ற அவர்கள் கோவிலில் தரிசனம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கற்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் வீதியில் போராட்டம் நடத்திய வலதுசாரி அமைப்பினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதோடு மட்டுமுன்றி போராட்டத்தில் ஈடுபட்ட வலதுசாரி அமைப்பினர் உள்ளூர் வியாபாரிகளையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் பந்தளத்தில் நடந்த சண்டையில் சபரிமலா கர்மா சமிதியைச் சார்ந்த சந்திரன் உன்னிதன் என்பவர் இறந்தார்.


 

.