தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அமமுக ஒன்றிய அலுவலகத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் சோதனை செய்ய முயன்றனர்.
அப்போது அமமுக கட்சியின் தொண்டர்கள் அவர்களை தடுத்தனர். அதிமுகவினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி அமமுகவினர் வாக்குவாதம் செய்தனர். இதனால் இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து துணை ராணுவப்படையினர் மற்றும் சிஆர்பிப் வீரர்கள் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் அங்கு விடிய விடிய போலீசார் உதவியுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேனி தொகுதி வாக்காளர்களுக்கு 300 ரூபாய் வீதம் பணப் பட்டுவாடா செய்ய கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பகுதி வாரியாக பணம் பிரிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அமமுக நிர்வாகிகள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்ததுள்ளனர்.
மேலும் இந்த சோதனையில், அமமுக வேட்பாளருக்கு பதிவு செய்யப்பட்ட ஆண்டிப்பட்டி சட்டமன்றத்திற்கன தபால் ஓட்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, வேலூர் மக்களவை தொகுதியில் துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து ரூ.11.53 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைப்பதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், வேலூர் தொகுதியில் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.