கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஜம்மு காஷ்மீர், பல்வேறு கட்டுப்பாடுகளுக்குக் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மூ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டது
- அப்போதிலிருந்து அங்கு கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன
- பல அரசியல் தலைவர்களும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்
New Delhi: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலிருந்து 10,000 துணை ராணுவப் படையினர் உடனடியாக திரும்பப் பெறப்படுவார்கள் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவத் துருப்புகள் அங்கு பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டன. இந்நிலையில் உடனடியாக ராணுவத் துருப்புகளின் ஒரு பகுதியினர் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று ஆணை மூலம் தெரிவித்துள்ளது மத்திய அரசு.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ள மத்திய ஆயுதப் படை போலீஸான சிஏபிஎஃப் குறித்தான மதிப்பாய்வுக்குப் பின்னர், மத்திய உள்துறை அமைச்சகம் இம்முடிவை எடுத்துள்ளது.
இது குறித்தான ஆணையில், “ஜம்மு காஷ்மீரில் உள்ள சிஏபிஎஃப்-ன் 100 பிரிவுகள் உடனடியாக திரும்பப் பெறப்பட்டு, அவர்களின் பழைய இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
100 பிரிவுகள் கொண்ட சிஏபிஎஃப் படைப் பிரிவில், 40 பிரிவு மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்தது என்றும், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் எஸ்எஸ்பி படைகளைச் சேர்ந்த தலா 20 பிரிவுகள் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஜம்மு காஷ்மீர், பல்வேறு கட்டுப்பாடுகளுக்குக் கீழ் வைக்கப்பட்டுள்ளது. அதிகமாக மக்கள் கூடுவதற்கு அங்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல, போன் மற்றும் இணையதள சேவைகளும் தடை செய்யப்பட்டன. மேலும், பல நூறு அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.
கடந்த சில மாதங்களாக, பாதுகாப்புச் சூழல் எப்படி இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. தற்போது ராணுவத் துருப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்டாலும், ஜம்மூ காஷ்மீரில் பெருமளவு ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சிஆர்பிஎஃப்-ஐச் சேர்ந்த 60 பட்டாலியன்கள் ஜம்மு காஷ்மீரில் உள்ளது. ஒரு பட்டாலியனில் 1,000 ராணுவ வீரர்கள் இருப்பர். இதையும் தாண்டி பல்வேறு துணை ராணுவப் படையின் வீரர்களும் அங்கு உள்ளனர்.