புயலை எதிர்கொள்ள மத்திய மாநில அரசுகள் தயாராகி வருகின்றன.
New Delhi: சூப்பர் புயலாக உருவடுத்துள்ள ஆம்பன் மேற்கு வங்கத்தில் நாளை பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கொரோனா பாதிப்பால் நாடு நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் ஆம்பன் புயல் மக்களின் கவலையை இன்னும் அதிகரித்துள்ளது.
புயலை எதிர்கொண்டு சேதத்தை குறைப்பதற்கான நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், பிரதமர் அலுவலகம், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநில அரசுகள் ஆகியவை தீவிரம் காட்டி வருகின்றன. ஆம்பன் புயல் குறித்த முக்கிய தகவல்களை பார்க்கலாம்.
1. ஒடிசா மற்றும் மேற்கு வங்க அரசுகள் அனைத்து விதமான ரயில்கள், சாலைப் போக்குவரத்து வாகனங்களை நிறுத்தி விட்டது. மீனவர்கள் கடற்கரையை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
2. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆம்பன் புயல் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றும், அதிக மழையை புயல் ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.
3. கடந்த சனிக்கிழமை மாலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் ஆம்பன் புயல் உருவானது. ஒரே நாளில் சூப்பர் புயலாக உருவடுத்தது என்று நாசா தெரிவித்துள்ளது.
4. கடந்த 2 ஆண்டுகளில் பருவமழைக்கு முன்னதாக வரும் 2-வது புயல் ஆம்பன் ஆகும். முன்னதாக ஃபானி புயல் பருவமழை தொடங்குவதற்கு முன்பு கரையை கடந்தது. இதனால் 10 லட்சம்பேர் வெளியேற்றப்பட்டனர்.
5. ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கையாக லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பே ஏற்படக் கூடாது என்பது மத்திய மாநில அரசுகளின் இலக்காக உள்ளது.
6. மேற்கு வங்கத்தில் நாளை ஆம்பன் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 155 - 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம்.
7. ஆம்பன் புயல் பாதிப்பை எதிர்கொள்ள பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
8. கடலோரப் பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அங்கிருக்கும் வீடுகள் மற்றும் லேசான பொருட்கள் மீது பெரும் சேதத்தை ஆம்பன் புயல் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
9. ஆம்பன் புயலை உம்பன் என்று தாய்லாந்து மொழியில் அழைப்பார்கள். இதற்கு வானம் என்று பொருள். சுழற்சி முறையில் புயல்களுக்கு பெயர் வைக்கப்பட்டு வருகிறது. அடுத்து வரும் புயலுக்கு நிசார்கா என்ற வங்கதேச நாட்டுப் பெயர் வைக்கப்படும்.
10. சிக்கிம், அசாம், மேகாலயா மாநிலங்களும் ஆம்பன் புயலால் மழையைப் பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.