கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் வெள்ளத்தின்போது பகுதியளவு மூழ்கிய வீட்டின் கூரையில் முதலை ஒன்று ஓய்வு எடுத்தது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, கேரளா மற்றும் கர்நாடகாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து தமிழகம் தரப்பில் எந்த வித கோரிக்கையும் வைக்காமல் காவிரி ஆற்றை கர்நாடகா திறந்து விட்டுள்ளது.
கர்நாடகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதுவரைக்கும் 40-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பெல்காம் மாவட்டத்தில் பெய்த கனமழையில் முதலைகள் ஊருக்குள் வரத் தொடங்கின.
அவற்றில் ஒரு முதலை பகுதி மூழ்கிய வீட்டின் கூரையில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. இதனைப் பார்ப்பதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். அவர்கள் முதலையை நோக்கி கற்களை எடுத்து வீசினர்.
கடைசியில் ஒருவழியாக அந்த முதலை வெள்ளத்தில் குதித்து நீந்திச் சென்று விட்டது. இதேபோன்ற சம்பவங்கள் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களிலும் நடந்துள்ளன.