நாடாளுமன்றத்தில் நிறைவேறிய இந்த புதிய இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
New Delhi: பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், முன் எப்போதும் இல்லாத அளவில் பாராளுமன்றத்தில் இரண்டே நாட்களில் சிறிய விவாதத்துடன், 10% இடஒதுக்கீடுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவானது, அரசியலமைப்பு சட்டத்தில் குறைந்தது இரண்டு அடிப்படை அம்சங்களை மீறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடுகள் 50 சதவிகிதத்திற்கு மிகக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, சில எதிர்கட்சிகளின் துணையுடன் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 10% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. அவசரமாக மசோதா நிறைவேற்றுவதற்கு பலர் தயக்கம் காட்டினாலும், பெரும்பாலானோர் அதனை ஆதரித்துள்ளனர்.
10 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கான வாக்கெடுப்பில் சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம், திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க, மசோதாவை தேர்வுக் குழுவிற்கு அனுப்புவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், இந்த மசோதா தோல்வியில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், சமூக நிலையிலும், கல்வியிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என அரசியல் சட்டத்தின் 15 மற்றும் 16-ஆவது பிரிவுகள் தெளிவாக வரையறுத்துள்ள நிலையில், இந்த புதிய இடஒதுக்கீடு மசோதா இதனை மீறும் வகையில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 1992ஆம் ஆண்டில், மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய பிறகு, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு மத்திய அரசு பணிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு என்று கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் ஆணையை 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு ரத்து செய்துள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது.