This Article is From Jan 25, 2019

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் அரசுக்கு நோட்டீஸ்!

10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான மசோதா நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு, ஒரு சில நாட்களிலேயே நிறைவேற்றப்பட்டது.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் அரசுக்கு நோட்டீஸ்!

உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு, மத்திய அரசு 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். 

New Delhi:

பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கும் பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு தரும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இந்த இட ஒதுக்கீடு முறை இந்த ஆண்டு முதலே பின்பற்றப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் இது குறித்தான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல் செய்ய எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், அது சரியானதுதானா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான மசோதா நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு, ஒரு சில நாட்களிலேயே நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு, மத்திய அரசு 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். 

தற்போது மத்திய அரசுக்குக் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் 50 சதவிகித இட ஒதுக்கீடு முறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை மாற்றும் வகையில் அரசு, 10 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அனைத்து மனுக்களும் ஒரே வழக்கின் கீழ் கொண்டுவரப்பட்டு, விசாரணை செய்யப்பட்டது. 

தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில், “1992 ஆம் ஆண்டின் மண்டல் கமிஷன், பொருளாதாரக் காரணி இட ஒதுக்கீட்டுக்கு உகந்ததது அல்ல எனக் கூறியுள்ளது” என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் 2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “இட ஒதுக்கீடு என்பது 50 சதவிகிதத்தைத் தாண்டி இருக்க முடியாது. எனவே தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய இட ஒதுக்கீடு சட்ட சாசனத்துக்கு எதிரானது. எனவே, அது ரத்து செய்யப்பட வேண்டும்” என்றும் அரசுக்கு எதிரான மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

.