பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைப்பட்டு, குடியரசு தலைவராலும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவசர அவசரமாக பா,ஜ,க அரசு எடுத்துள்ள இந்த முடிவு குறித்து சில ஆளுமைகளிடம் பேசினேன்.
கல்வியாளர் பிரின்ஸ் கதேந்திரபாபு கூறுகையில், “சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே எல்லா துறைக்கான ஆசிரியராக இருக்க முடியும். வில் வித்தையை கற்றுக்கொடுப்பதாக இருந்தாலும் சரி, அரசு நிர்வாகத்தை கற்றுக்கொடுப்பதாக இருந்தாலும் சரி எல்லா துறைக்கும் ஆசிரியர்களாக ஒரு சமூகத்தில் பிறந்தவர்களாகத்தான் இருக்க முடியும். அப்படியான இட ஒதுக்கீடு ஒரு காலத்தில் இருந்தது. இந்த இடஒதுக்கீட்டை மாற்றி ஜனவரி 26, 1950லிருந்து இந்திய அரசியலமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு எல்லோரும் எல்லா வேலைகளும் செய்வதற்கு ஏற்றவாறு சமத்துவத்தை கொண்டு வந்தார்கள். அதில் காலம் காலமாக ஒடுக்குமுறைக்கு உள்ளான சமூகங்கள் கல்வியிலும், சமூகத்திலும் மிகவும் பின்தங்கி இருந்தார்கள்.
அவர்கள் சமத்துவ நிலைக்கு வரவேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கு வேலை வாய்ப்பில், கல்வியில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் அதுதான் இடஒதுக்கீடு. ஆனால் தற்போது இவர்கள் கொண்டுவர முயற்சிக்கும் இட ஒதுக்கீடு சமூகத்திலும், கல்வியிலும் ஏற்கனவே முன்னேறி இருப்பவர்களை மேலும் முன்னேற்றி சமத்துவ நிலையை உருவாக்க கூடாது என்கிற அடிப்படையில் இந்த முயற்சியை செய்கிறார்கள்.
இன்று இந்தியாவில் இருக்கும் தீண்டாமை பற்றிய விவாதத்தை பின்னுக்கு தள்ளுவதும், சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான விவாதத்தை பின்னுக்கு தள்ளுவதற்கான வேலைதான் இந்த 10 சதவீத இடஒதுக்கீடு.
இந்திய அரசியலமைப்புச்சட்டம் வந்து 70 ஆண்டு காலம் ஆகிறது. பிரிவு 17 தீண்டாமை ஒழிப்பது என்று இருக்கிறது. தீண்டாமையை ஒழிக்க என்ன நடவடிக்கையை எடுத்திருக்கிறீர்கள்? என்ன செயல் திட்டம் இருக்கிறது? தீண்டாமைக்கு காரணமாக இருக்கின்ற சாதியை ஒழிக்க என்ன திட்டம் இருக்கிறது?
ஒரு ஏழையாக இருப்பவருக்கு பணம் கொடுத்தால், கல்வி கொடுத்தால் நல்ல நிலைக்கு வந்து விடுவார். ஆனால், சமூக ஒடுக்குமுறையில் இருப்பவர் குடியரசு தலைவர் ஆனாலும் கூட ஒடுக்குமுறையில் இருந்து அவரால் விடுபட முடியவில்லை.
ஏழ்மையையும், சமூக ஒடுக்குமுறையையும் ஒரு தட்டில் வைத்து பார்க்க முடியாது. விடுதலை இந்தியாவில் 1966-ல் கோத்தாரிக் கல்விக்கொள்கை முறையில் பொதுப்பள்ளி முறைமையை உருவாக்க சொன்னார்கள். பொதுப்பள்ளி முறைமையில் கல்வி கொடுக்க சொன்னார்கள். இந்தியாவில் இருந்த கல்வியாளர்களை தலைவராகக் கொண்ட கல்விக்குழுக்கள் அனைத்துமே பொதுப்பள்ளி முறைமையில் கல்வி கொடுக்க சொல்லியிருக்கிறார்கள். உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றம் என்பது அரசு தன் பொறுப்பிலும் செலவிலும் கல்வியை கொடுத்ததன் விளைவுதான்.
பொதுப்பள்ளி முறைமை மூலமாக மக்களுக்கு கல்வியை கொடுக்க வேண்டும். அரசின் முழு பொறுப்பிலும் செலவிலும் கல்வி அனைவருக்கும் கொடுக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கல்வியின் மூலம் முன்னேறி சமஉரிமை கோருவதை இவர்களால் பொருத்துக்கொள்ள முடியாததன் வெளிப்பாடுதான் இந்த 10 சதவீத இடஒதுக்கீடு” என்று அழுத்தமாக தன் கருத்தை பதிவு செய்தார்.
விடுதலை சிறுத்தைக் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷா நவாஷ் கூறுகையில், “இடஒதுக்கீடு என்பது காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வலி நிவாரணியாகத்தான் கொண்டுவரப்பட்டது. அது எந்த நோக்கத்தில் உருவாக்கப்பட்டு கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கத்தையே சிதைக்கின்ற வகையில் உயர் வகுப்பினருக்கு பொருளாதார ரீதியிலான அளவுகளைக்கொண்டு இடஒதுக்கீட்டை கொண்டு வருகிறார்கள்.
அப்பட்டமாக இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவதற்கான நடவடிக்கையாக நான் பார்க்கிறேன். இந்த வழக்கு நீதிமன்றம் சென்றால் வழக்கு நிற்காது என்பது அவர்களுக்கு தெரியும். ஆனாலும் இடஒதுக்கீட்டை கேள்விக்குட்படுத்தக்கூடிய நடவடிக்கையை அவர்கள் செய்கிறார்கள்.
நடந்து முடிந்த தேர்தல்களில் மூன்று மாநிலத்தில் பா.ஜ.க தோல்வியை சந்தித்துள்ளனர். அதை சரிசெய்வதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். பொதுத்தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட மக்களோ, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களோ, தாழ்த்தப்பட்ட மக்களோ அவர்களின் ஓட்டு வங்கி கிடையாது.
வன்முறையை தூண்டி கலவரங்கள் மூலம் இந்து என்கிற கோட்பாட்டிற்கு கீழ் இந்த மக்களை கட்டமைத்து இத்தனை நாட்கள் ஓட்டு வாங்கிக்கொண்டிருந்தார்கள். அதுவும் தற்போது பொருளாதார நடவடிக்கைகள் மூலம் உழைக்கும் மக்கள் பா.ஜ.கவிற்கு எதிராக திரும்பியுள்ளனர். இப்படி இருக்க பா.ஜ.கவின் வாக்கு வங்கி என்பது உயர் வகுப்பினர்தான். அந்த வகுப்பினரின் வாக்கு வங்கியை முழுமையாக பெறுவதற்கான வழிதான் இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீடு. அரசியலைமைப்பு சட்டப்படி இது செல்லாது நீதிமன்றத்திலும் இது நிற்காது என்று தெரிந்தும் கொண்டு வருகிறார்கள் என்பதற்கு இதுதான் காரணம்.
எப்போதும் வலதுசாரிகள் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அமலாகும் போது வி.பி. சிங் அரசையே கவிழ்த்தவர்கள், அர்ஜுன் சிங் கொடும்பாவியை ஐ.ஐ.டி வளாகத்தில் எரித்தவர்கள் இவர்கள். இடஒதுக்கீட்டினால் தான் நாடு சீரழிந்து போகிறது என்று சொல்லக்கூடியவர்கள். இடஒதுக்கீட்டின் மூலம் தகுதி திறமை வாய்ந்தவர்கள் உயர் நிலைக்கு வர முடியாமல் போகிறது என்று கூறுகிறவர்கள். இப்போது அதே உயர் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு என்று சொல்லும் போது தகுதி திறமைக்கும், இடஒதுக்கீட்டிற்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். ஆகவே இது கண்துடைப்பிற்கான வேலையே தவிற வேறொன்றும் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து” என்றார்.