கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு மசோதா நிறைவேறியது. இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் திமுகவும், அதிமுகவும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
10% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் பேசுகையில், பொருளாதார அடிப்படையிலான இந்த மசோதாவை அதிமுக கடுமையாக எதிர்க்கிறது. எந்தவொரு ஆவணமும் கணக்கெடுப்பும் இல்லாமல் மத்திய அரசு 10% இடஒதுக்கீட்டை கொண்டு வருகிறது. 10 சதவிகித பொது இட ஒதுக்கீடு நிலையானதாக இருக்காது. சாதி ரீதியிலான பின் தங்கிய மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. நரசிம்மராவ் ஆட்சியில் 10% இடஒதுக்கீடு கொண்டுவந்தபோது ஏற்கனவே நீதிமன்றம் தடைவிதித்தது. இடஒதுக்கீடு என்பது தனிப்பட்ட நபருக்கு இல்லாமல் சாதிவாரியாகத்தான் இருக்க வேண்டும். தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு கொண்டுவர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றார்.
இதனையடுத்து பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு செய்தது.
முன்னதாக, 10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்தபோது பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,
நாட்டில் சாதியம் எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் அனைவருக்குமான நீதி நிலைநாட்டப்படும். தமிழகத்தில் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் வசிக்கிறார்கள். பிரதமர் அறிவித்தபடி ரூ.15 லட்சம் வழங்கினால் அவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு தேவைப்படுகிறது.?
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் முன்னேற்றமடைய பல திட்டங்கள் இருக்கும்போது இடஒதுக்கீடு ஏன்? படித்திருந்தும் அவமதிக்கப்பட்டதால் தான் அம்பேத்கர் தலித்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரினார். சமூகத்தில் பொருளாதாரத்தை வைத்து இடஒதுக்கீடு வழங்குவது முறையானது அல்ல என்று கூறினார்.