This Article is From Jan 08, 2019

10% இடஒதுக்கீடு: விபரீத விளையாட்டைத் தொடங்கியுள்ளது பாஜக: மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

10% இடஒதுக்கீடு: விபரீத விளையாட்டைத் தொடங்கியுள்ளது பாஜக: மு.க.ஸ்டாலின்

பணியில் சேரும் உரிமை வழங்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்வுடன் விபரீத விளையாட்டைத் தொடங்கியிருக்கிறது மத்திய பாஜக அரசு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடுகள் 50 சதவிகிதத்திற்கு மிகக் கூடாது என்ற உச்சநீதிமன்றம் முன்னர் வழங்கிய தீர்ப்பால் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொது பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதில் சிக்கல் உள்ளது. எனவே ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டிற்கான உச்ச வரம்பை 50 சதவிகிதத்தில் இருந்து 60 சதவிகிதமாக அதிகரிக்க வசதியாக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டமுன்வடிவை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கொள்கையை நாசப்படுத்தக்கூடியது என்றார். சமூக நிலையிலும், கல்வியிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என அரசியல் சட்டத்தின் 15 மற்றும் 16-ஆவது பிரிவுகள் தெளிவாக வரையறுத்து. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது.

மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய பிறகு, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு மத்திய அரசு பணிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு என்று கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் ஆணையை 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு ரத்து செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி பி.பி. ஜீவன்ரெட்டி, சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள மக்களுக்கும், அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவிட கொண்டு வரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு. ஆகவே ஒருவரின் வருமானம் அல்லது சொத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று தெளிவுபடக் கூறியிருக்கிறார்.

ஆகவே ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, அரசியல் சட்டத்திற்கு மாறாக இப்படியொரு இட ஒதுக்கீட்டை, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கொண்டுவந்து மத்திய பாஜக அரசு, பணியில் சேரும் உரிமை வழங்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்வுடன் விபரீத விளையாட்டைத் தொடங்கியிருக்கிறது.

ஆகவே, 69 சதவீத இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக அமல்படுத்தி வரும் தமிழகத்திலிருந்து முதல் எதிர்ப்புக் குரல் ஆணித்தரமாக ஒலிக்க வேண்டும். பெரியார் - அண்ணா - காமராஜர் ஆகியோர் பண்படுத்தித் தந்த வழியில், சமூக நீதியின் நாற்றங்காலாகத் தொடர்ந்து இருந்துவரும் தமிழக சட்டப்பேரவையிலிருந்து சமூக நீதியின் கட்டமைப்பை அசைத்துப் பார்க்க எண்ணும் மத்திய அரசுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.


 

.