மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.
மக்களவையில் ஆளும் பாஜகவுக்கு அதிக உறுப்பினர்கள் இருந்ததால் அங்கு மசோதா எளிதாக நிறைவேறி விட்டது. மாநிலங்களவையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உறுப்பினர்கள் பலர் அதனை ஆதரித்தனர். இதையடுத்து மசோதா நிறைவேறியது.
இதனை சட்டமாக்க குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நிலையில், இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் எம்.பி. ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.