சீனாவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- கொரோனா வைரசுக்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
- தமிழகத்தில் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை சீராக உள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 100 வயது முதியவர் ஒருவர், பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட அதிக வயதுடைய நபராக இவர் கருதப்படுகிறார்.
சீன ஊடகங்கள் அளித்துள்ள தகவலின்படி பாதிக்கப்பட்ட 100 வயது முதியவர் கடந்த மாதம் 24-ம்தேதி சிகிச்சைக்காக ஹூபே மாகாணத்தில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூச்சுத் தவிப்பு, அல்சீமர், ரத்தக் கொதிப்பு, இதய நோய் உள்ளிட்டவையும் இருந்தன. மொத்தம் அவருக்கு 13 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், ப்ளாஸ்மா பரிமாற்றம், பாரம்பரிய சீன சிகிச்சை உள்ளிட்டவற்றை முதியவர் எடுத்துக் கொண்டார்.
இதனால் அவரது உடல்நிலை முன்னேறி நேற்று முன்தினம் அவர், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் பரவியுள்ளது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை சீனாவில் 3 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. இவர்களில் அதிகமானோர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.