தன் உடன் பிறந்தவர்களை பாதுகாக்க 3-ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை விட்டார் பகீரதி அம்மா.
Kollam: கேரளாவை சேர்ந்த 105 வயதாகும் பாட்டி பகீரதி அம்மா, தனது 4-ம் வகுப்பு தேர்வை எழுதி முடித்துள்ளார். அவரது இந்த விடா முயற்சியும், ஆர்வமும் ஏராளமானோருக்கு ஊக்கத்தை அளிப்பதாக உள்ளது. 105 வயது பாட்டியை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
பகீரதி அம்மாவுக்கு 6 பிள்ளைகளும், அவர்கள் மூலமாக 16 பேரன் பேத்திகளும் உள்ளனர்.
9 வயது இருக்கும்போது அவர் 3-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அப்போது, தன் உடன் பிறந்தவர்களை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. இதையடுத்து, பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் விடா முயற்சி மற்றும் ஆர்வத்துடன் அவர் தற்போது, 4-ம் வகுப்புக்கான தேர்வை எழுதி முடித்திருக்கிறார். இதுகுறித்து தேர்வு அதிகாரி பிரதீப் குமார் கூறுகையில், 'பாட்டி பகீரதி அம்மா அனைத்து தேர்வுகளையும் எழுதி முடித்துள்ளார். எந்த வயதிலும் கல்வி கற்க விரும்புவோருக்கு அவர் ஒரு ரோல் மாடலாக இருக்கிறார்' என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு 96 வயது பாட்டி ஒருவர், ஆரம்பப் பள்ளிப் படிப்பை 98 சதவீத மதிப்பெண்களுடன் முடித்தார். இந்தியாவில் கல்வியறிவு சதவீதத்தை எடுத்துக்கொண்டால் கேரளாதான் முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.