ஊதிய உயர்வு, 30 சதவீத போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீபாவளி தினத்தன்று போரட்டம் நடத்த உள்ளதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்து இருந்தனர். 5ஆம் தேதி இரவு முதல் 6ஆம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிராக செல்வராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் என்பது சட்டவிரோதமானது எனவும் இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்திற்கு தடை விதித்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் கீழ் ஆம்புலன்ஸ் சேவை வருவதால் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் மனு தொடர்பாக ஊழியர் சங்கங்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.