This Article is From May 16, 2020

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு; மாணவர்களுக்கு இ-பாஸ்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வெளியூரில் தங்கியுள்ள மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத இ-பாஸ் வழங்கப்படும்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு; மாணவர்களுக்கு இ-பாஸ்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு; மாணவர்களுக்கு இ-பாஸ்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் மார்ச் 24ம் தேதி முதல் பொது ஊரடங்கு அமலில்  உள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. பள்ளிகள் ஒத்திவைக்கப்பட்டதால், அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அரசு அறிவித்தது.

இதனிடையே, "ஜூன்.1ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்தார். 12-ம் வகுப்பு கடைசி தேர்வை எழுதாத 36 ஆயிரம் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு ஜூன் 4ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர். 

எனினும், முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் தேர்வுகளை நடத்த கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது.​​ இதற்கிடையில், கரோனா அச்சுறுத்தலால் தேர்வின்போது தனிநபர் இடைவெளியை மாணவர்கள் பின்பற்றவும் ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்களை மட்டுமே அனுமதிக்கவும், அதற்கேற்ப மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு மையத்தை அமைக்கவும் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறும்போது, ''வெளியூரில் தங்கியுள்ள மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத இ-பாஸ் வழங்கப்படும்.

வெளி மாவட்டங்களில், தனியார் பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்து வரும் மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பே அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும், மேலும் அவர்களுக்கு உணவு வசதியும் செய்து தரப்படும். பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

.