8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முடிய இருந்தன. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இதனால். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 1 தேர்வு ஒன்று, 10-ம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கால அட்டவணைப்படி எதுவும் நடத்த முடியாமல் போனது. இதனால், மீண்டும் தேர்வுகள் நடப்பதில் இழுபறி ஏற்பட்டது.
இதையடுத்து, 10ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்தது. இதற்கிடையே, கொரோனா காலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது அவர்களின் மனநிலை பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் தேர்வு ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றி தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 11-ம் வகுப்பு தேர்வு ஜூன் 16-ம் தேதி நடைபெறும் என்றும் 12-ம் வகுப்பு மறு தேர்வு ஜூன் 18-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இன்னும் 12 நாட்களே உள்ளதால், தமிழகத்தில் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களின் வருகையை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.