தமிழகத்திலே அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52,741 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 100 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கொரோனாவால் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்தான நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகளும் முடங்கின. அடுத்தடுத்த மாதங்களாக தற்போது வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருவதன் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் தள்ளிப்போனது.
இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலனை காக்க 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில், மொத்த பள்ளி மாணக்கரின் எண்ணிக்கை 9,39,829 ஆகும். மாணவியரின் எண்ணிக்கை 4,68,070 ஆகும், மாணவர்களின் எண்ணிக்கை 4,71,759 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பதிவு செய்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,690. இவற்றில் மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 7,368 ஆகும். உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5,322 ஆகும்.
மாற்றுத் திறனாளி மாணக்கரின் மொத்த எண்ணிக்கை 6,235 ஆகும். தமிழகத்திலே அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52,741 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களுக்கு செல்போன் குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பள்ளிகளில் நேரில் சென்றும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
மதிப்பெண் விவரங்களை தேர்வாணைய இணையதளமான, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்கள் மூலமாகவும் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 17 முதல் 21ம் தேதி வரை பள்ளி தலைமையாசிரியரிடம் பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.