This Article is From Apr 09, 2020

அமெரிக்காவில் பரவும் கொரோனா : 11 இந்தியர்கள் பலி, 16 பேருக்கு நோய் தொற்று உறுதி

கொரோனா நோய் தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நான்கு பெண்கள் உட்பட 16 இந்தியர்களும் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்

அமெரிக்காவில் பரவும் கொரோனா : 11 இந்தியர்கள் பலி, 16 பேருக்கு நோய் தொற்று உறுதி

நியூயார்க் நகரம் அமெரிக்காவில் COVID-19-ன் மையமாக உருவெடுத்துள்ளது

ஹைலைட்ஸ்

  • நியூயார்க் நகரம் அமெரிக்காவில் COVID-19-ன் மையமாக உருவெடுத்துள்ளது
  • அமெரிக்காவில் கொரோனா காரணமாக சுமார் 11 இந்தியர்கள் பலியாகியுள்ளனர்
  • இதுவரை 14,000-க்கும் அதிகமானோர் அங்கு கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்
Washington:

அமெரிக்காவில் கொரோனா காரணமாக சுமார் 11 இந்தியர்கள் பலியாகியுள்ளனர், மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடக அமெரிக்கா திகழ்ந்து வரும் நிலையில், இதுவரை 14,000-க்கும் அதிகமானோர் அங்கு கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் கோவிட் - 19 தொற்று காரணமாக இறந்த அனைத்து இந்திய குடிமக்களும் ஆண்கள். அவர்களில் 10 பேர் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்களில் நான்கு பேர் நியூயார்க் நகரில் டாக்ஸி ஓட்டுநர்கள் என்று கூறப்படுகிறது.

நியூயார்க் நகரம் அமெரிக்காவில் COVID-19-ன் மையமாக உருவெடுத்துள்ளது, இதுவரை அங்கு 6,000-க்கும் மேற்பட்ட இறப்புகளுக்கும் 1,38,000-க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளது. நியூ ஜெர்சியில் 1,500 இறப்புகள் மற்றும் கிட்டத்தட்ட 48,000 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும் புளோரிடாவில் ஒரு இந்தியர் வைரஸால் இறந்ததாக கூறப்படுகிறது. கலிபோர்னியா மற்றும் டெக்சாஸ் மாநிலங்களில் உள்ள வேறு சில இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் தேசியத்தையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். 

கொரோனா நோய் தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நான்கு பெண்கள் உட்பட 16 இந்தியர்களும் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர். மாறுபட்ட பின்னணியிலிருந்து வரும் அவர்களில் எட்டு பேர் நியூயார்க்கிலிருந்து வந்தவர்கள். மூன்று பேர் நியூஜெர்சியிலிருந்து வந்தவர்கள் மற்ற அனைவரும் டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியா போன்ற பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்ட இந்தியர்கள் உத்தரகண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்காவின் இந்தியத் தூதரகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இணைந்து இந்திய-அமெரிக்க அமைப்புகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றன. கொடிய வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் காரணமாக, உள்ளூர் நகர அதிகாரிகளே இறந்தவரின் இறுதி சடங்குகளைச் செய்து வருகின்றனர். பல சந்தர்ப்பங்களில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கூட அவர்களின் தகனங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

.