This Article is From Oct 29, 2018

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் கோரிய வழக்கு: ஓ.பி.எஸ் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு!

கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர். திட்டமிட்டப்படி நாளை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனர்.

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் கோரிய வழக்கு: ஓ.பி.எஸ் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு!

திமுக சார்பிலும், டிடிவி தினகரன் அணியினர் சார்பிலும் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், தகுதி நீக்க வழக்கில் ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்பு, அதிமுகவில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் தலைமையிலான இரு அணிகள் உருவாகின. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். பின்னர், இருதரப்பினர்களுக்கு இடையே நட்பு உறவு ஏற்பட்டது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இவர் உள்பட 11 பேரும் அதிமுகவில் இணைந்தனர்.

இதைத்தொடர்ந்து, ஆளுநரிடம் மனு கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர், முதலமைச்சர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது நடவடிக்கை எடுக்காதற்கு எதிராக தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதே கோரிக்கையுடன் டி.டி.வி. தினகரன் தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், சபாநாயகர் உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். இதை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுக்கக் கூடாது என்றும் தங்களுக்கு வழக்கை எதிர் கொள்ள கால அவகாசம் வேண்டும் என்றும் அதனால், வழக்கை வேறு ஒரு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர். திட்டமிட்டப்படி நாளை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனர்.


 

.