மணிப்பூர் அரசு, மியான்மருடன் இருக்கும் அனைத்து எல்லைகளையும் மூடியுள்ளது. கொரோனா பரவாமல் இருக்க இந்த நடவடிக்கையை அம்மாநில அரசு எடுத்துள்ளது.
ஹைலைட்ஸ்
- ஈரானில் சிக்கியிருந்த இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வந்துள்ளது
- இந்திய விமானப் படை விமானம் மூலம் இந்தியர்கள் மீட்பு
- தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் புதிதாக 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58-ஐத் தொட்டுள்ளது. உலக அளவில் 100 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகம் இருப்பதனால், மத்திய அரசு அதைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இன்று காலை ஈரானிலிருந்த 58 இந்தியர்களை விமானம் மூலம் தாயகம் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.
இது குறித்த 10 முக்கியத் தகவல்கள்:
1.ஈரானில் கொரோனா வைரஸ் காரணமாக 200 பேர் இறந்துள்ள நிலையில், இந்திய விமானப் படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம், இந்தியர்களை அந்நாட்டிலிருந்து தாயகம் கொண்டு வந்தது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவின் உஹான் மாகாணத்திலிருந்து 76 இந்தியர்கள் மற்றும் 36 வெளிநாட்டினரை இந்தியா, தாயகம் கொண்டு வந்தது.
2.கேரளாவில் கடந்த 3 நாட்களில் மட்டும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31 ஆம் தேதி வரை மாநிலத்தில் இயங்கும் சினிமா திரையரங்குகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பிலிருந்ததாக 270 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் 95 பேர் அபாயகரமான நிலையில் இருப்பதாக அரசு அதிகாரிகள் தரப்பு சொல்கிறது.
3.கடந்த திங்கட் கிழமை மட்டும் இந்தியாவில் 8 பேருக்கு கொரோனா இருப்பது சோதனை மூலம் தெரியவந்தது. பெங்களூருவில் நேற்று, 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. இதனால் கர்நாடகாவில் 4 பேருக்கு கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
4.ஜம்மூ காஷ்மீரைச் சேர்ந்த 63 வயதுப் பெண் ஒருவர், சமீபத்தில் ஈரானுக்குச் சென்றிருந்தார். அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கும் இன்னொருவருக்கும் ‘அதிக வைரஸ் பாதிப்பு' இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 8.74 லட்சம் பேரிடம் கொரோனா குறித்த சோதனை செய்யப்பட்டது எனக் கூறியுள்ளார். அதேபோல மத்திய அரசு தரப்பு, எந்த வெளிநாட்டுக் கப்பலும் இந்தியத் துறை முகங்களில் நிறுத்த அனுமதி கொடுக்கப்போவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
6.சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. கொரோனா பீதியால் பல்லாயிரம் கோடி ரூபாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியப் பங்குச் சந்தைகளிலும் கிட்டத்தட்ட 6 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒரு நாள் வீழ்ச்சி இதுவாகும்.
7.மணிப்பூர் அரசு, மியான்மருடன் இருக்கும் அனைத்து எல்லைகளையும் மூடியுள்ளது. கொரோனா பரவாமல் இருக்க இந்த நடவடிக்கையை அம்மாநில அரசு எடுத்துள்ளது.
8.அடுத்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசத்துக்கு அரசு முறை பயணம் செல்ல இருந்தார். ஆனால், அந்த நாட்டிலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளதால் பயணம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
9.ஐ.நா சபையைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் 1 முதல் 2 டிரில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர். இந்த ஆண்டில் மட்டும் இந்த இழப்பு ஏற்படும் என்றும் இதைச் சமாளிக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
10.இருமல் மற்றும் தும்மல் மூலம் எளிதாக கொரோனா பரவக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் அப்படிப்பட்டவர்களிடமிருந்து தள்ளி இருப்பதையும் தாண்டி, அடிக்கடி கை கழுவுதல் மற்றும் சுகாதாரமாக இருத்தல் அவசியம் என்கிறார்கள்.