6 ஆம் வகுப்பு மாணவன் வீட்டை விட்டு சென்ற சிறுது நேரத்தில், போலீசாரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
Noida: நொய்டாவில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி திட்டியதால், கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளான். இதைத்தொடர்ந்து சிறுவன் கடத்தப்பட்டதாகவும் ரூ.5 லட்சம் பணம் கேட்பதாகவும் அவனது பெற்றோர் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
நொய்டாவின் சிஜார்சி பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் அவனது பெற்றோர் தொடர்ந்து திட்டி வருவதால் அவர்கள் மீது கோபத்தில் இருந்துள்ளான். சிறுவனின் தந்தை மளிகை கடை நடத்தி வருகிறார். அந்த கடையின் கல்லாப்பெட்டியில் மகனை இருக்க சொல்லி வற்புறுத்தி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் அடிக்கடி கல்லாப்பெட்டியில் இருந்து பணம் எடுத்து வந்துள்ளான். கடந்த திங்களன்று ரூ.100 எடுத்துள்ளான் இதற்காக சிறுவனின் மாமா அவனை திட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து, வீட்டை விட்டு வெளியே வந்த சிறுவன் மோட்டார் சைக்களில் லிப்ட் கேட்டு பிஸ்ராக் வரை சென்றுள்ளான். அங்கு சென்றதும் சிறிது நேரம் சுற்றி திறிந்துள்ளான்.
பின்னர், அருகில் இருந்த ஒருவரிடம் செல்போன் வாங்கி தனது தந்தைக்கு போன் செய்துள்ளான். போனை எடுத்த தந்தையிடம், நான் பிஸ்ராக்கில் உள்ளேன் 5 நிமிடத்தில் இங்கு வந்து என்னை அழைத்துச்செல்லுங்கள் என சிறுவன் தெரிவித்துள்ளான். இதைத்தொடர்ந்து சிறுவன் பேசிய மொபைல் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.
இதனால், பயந்துபோன சிறுவனின் தந்தை, தனது மகனை யாரே கடத்தி சென்றுவிட்டதாகவும், ரூ.5 லட்சம் பணம் கேட்டதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரை தொடர்ந்து போலீசார் அழைப்பு வந்த எண்ணை கண்காணித்துள்ளனர். அந்த எண் பிஸ்ராக்கில் இருப்பது தெரிய வந்ததும் போலீசார் பிஸ்ராக் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு திரும்ப அந்த மொபைல் ஆண் செய்யப்பட்டதும் அந்த எண் இருக்கும் இடத்திற்கு சென்றனர். அங்கு சுற்றி திறிந்த சிறுவனையும் போலீசார் மீட்டனர்.
ஆனால், அப்போது தான் போலீசாருக்கு தெரிந்துள்ளது, சிறுவன் 5 நிமிடத்தில் வர சொன்னதை, அவனது தந்தை தவறுதலாக புரிந்து கொண்டு 5 லட்சத்துடன் வர சொன்னதாக நினைத்துள்ளார் என்பது. இதையடுத்து சம்பவம் குறித்து எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.