This Article is From Sep 06, 2018

ஆசிரியர் தின சிறப்பு: வியப்பில் ஆழ்த்தும் 11 வயது சென்னை ஆசிரியை!

புவிவியல் நிபுணர்கள் டாக்டர். நாகேந்திரா, டாக்டர்.ராம்குமார் ஆகியோரின் உதவியுடன் புதைபடிவ பாடங்களை அஷ்வதா கற்று வருகிறார்

ஆசிரியர் தின சிறப்பு: வியப்பில் ஆழ்த்தும் 11 வயது சென்னை ஆசிரியை!
Chennai:

சென்னையைச் சேர்ந்த அஷ்வதா என்ற 11வயது இளம் மாணவி, ‘எலும்பு ஆராய்ச்சி’ சார்ந்த பாடங்களை பள்ளி, கல்லூரிகளில் கற்பித்து வருகிறார். இளம் ஆசிரியையின் ஆர்வம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

‘எலும்பு’ சம்பந்தமான புகைப்படங்களை என்சைக்லோபீடியேவில் கண்டது முதலே, அஷ்வதாவிற்கு எலும்பு ஆராய்ச்சியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அவரது பெற்றோர், எலும்பு ஆராய்ச்சிக்கு தேவையான புத்தகங்களை வாங்கி கொடுத்து அஷ்வதாவை ஊக்கப்படுத்தி உள்ளனர்.

அதனை தொடர்ந்து, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு சென்று எலும்பு ஆராய்ச்சி சார்ந்த முக்கிய ஆவணங்களை சேகரித்து வந்துள்ளார் அஷ்வதா. தீரா ஆர்வத்தினால், தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டு வரும் அஷ்வதா, தனது இல்லத்திலேயே ஒரு ‘மினி அருங்காட்சியகம்’ உருவாக்கியுள்ளார்
 

gp9u574

அதுமட்டுமின்றி, வரலாறு சிறப்பு மிக்க பாலெண்டாலஜிஸ்ட் எனப்படும் புதைபடிவம் சம்பந்தமான பாடங்களை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கற்பித்து வருகிறார். “வரலாறு குறித்து தெரிந்து கொள்வது மிக முக்கியமானது. குறிப்பாக, மனிதர்களின் வளர்ச்சி வரலாற்றை பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்” என்று சொல்லும் அஷ்வதா, உலகின் சிறந்த புதைபடிவ ஆராய்ச்சியாளராக வேண்டும் என்ற ஆசையை நனவாக்க உழைத்து வருகிறார்.

புவியியல் நிபுணர்கள் டாக்டர். நாகேந்திரா, டாக்டர்.ராம்குமார் ஆகியோரின் உதவியுடன் புதைபடிவ பாடங்களை அஷ்வதா கற்று வருகிறார். பல்லாவரத்தில் உள்ள நாராயணா இ-டெக்னோ பள்ளியில் படித்து வரும் அஷ்வதா, எலும்பு ஆராய்ச்சி சார்ந்து பாடம் எடுப்பதற்கு எப்போதும் தயார் என்று உற்சாகமாக சொல்கிறார். இளம் ஆசிரியயைக்கு ஆராய்ச்சியாளர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

.