இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81-ஆக உயர்ந்துள்ளது
சீனாவிலிருந்து திரும்பிய 112 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லையென்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களுக்குக் கட்டாய மருத்துவச் சிகிச்சை நடத்தப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பிரமாண்ட மருத்துவ முகாமில் 14 நாட்களுக்கு அவர்கள் தங்க வேண்டும்.
இந்த நிலையில், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினரால் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மருத்து முகாமில் சீனாவிலிருந்து திரும்பிய 112 பேர் தங்க வைக்கப்பட்டனர். அவர்களில் 36 வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள்.
கடந்த 14 நாட்களுக்கும் மேலாக அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லையென்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்தா ராய் மற்றும் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் தலைவர் எஸ்.எஸ்.தேஸ்வால் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, 112 பேரில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81-ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை சீரடையும் வரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 64 பேர் இந்தியர்கள். 16 பேர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் கனடா நாட்டுக் குடிமகன்.
இந்த 81 பேருடன் தொடர்பிலிருந்தவர்களையும் மத்திய சுகாதாரத்துறை கண்டுபிடித்து, அவர்களையும் கண்காணித்து வருகிறது. இதன் அடிப்படையில் சுமார் 4 ஆயிரம் பேரின் உடல்நிலை ஆய்வு செய்யப்படுகிறது.
இதேபோன்று, கொரோனா அதிகம் தாக்கிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில், இந்தியர்கள் சிலர் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா விமானத்தை அனுப்பவுள்ளது. நாளை மதியம் இத்தாலிக்குச் செல்லும் விமானம் இந்தியர்களை மீட்டு ஞாயிறன்று காலை டெல்லி திரும்பும் என்று விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.