Hyderabad: ஹைதராபாத்தில் நடந்த ரெய்டின்போது ஜூபிலி ஹில்ஸ் பகுதியிலுள்ள ஒரு மாலின் அறையில் 114 போலி நிறுவனங்கள் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எட்டு அதிகாரிகள் கொண்ட படையினர் ஃபார்ச்சூன் மொனார்க் மாலின் மூன்றாம் தளத்திலுள்ள ஒரு அறையில் இன்று காலை சோதனை நடத்தியபோது கண்ட காட்சியால் அதிர்ச்சி அடைந்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட 114 கம்பெனிகளில் குறைந்தது 50 கம்பெனிகள் எந்தத் தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருப்பவை. அதில் பல 8-15கோடி வரை நஷ்டக்கணக்கு காண்பித்துள்ளன. இந்நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று கடன் கொடுக்கும் பேரில் தங்களுக்குள் பணத்தை மாற்றிக்கொள்ளவும் சுழற்சியில் வைத்திருக்கவும் பயன்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்நிறுவனங்களுக்கு வேளாண் நிலம் உள்ளிட்ட சொத்துகள் இருப்பதும் இவை வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்துவந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இவற்றின் இயக்குநர்கள் இந்நிறுவனங்களிலிருந்து ஊதியம் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு நபரும் 25-30 நிறுவனங்களுக்கு இயக்குநராக இருந்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் ஆவார்கள்.
இந்தியாவில் ஒருவர் இருபது நிறுவனங்களுக்கு மேல் இயக்குநராக இருப்பது சட்டப்படி குற்றமாகும்.
25 நிறுவனங்களுக்கு மேல் ஒரே இடத்தில் இயங்கி வந்தால் சோதனையிட தில்லியிலிருந்து தரப்பட்ட உத்தரவின் பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. மேலும் ஆறு இடங்களில் இதே போன்று சோதனை நடத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இங்கெல்லாம் ஒரே அறையில் 48, 38, 33, 28 என்ற எண்ணிக்கையில் போலி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
SRSR அட்வைசரி சர்வீஸ் என்ற நிறுவனமே கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து போலி நிறுவனங்களுக்கும் கணக்காளராக இருந்தது என்று என்டிடிவிக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. பிடிபட்ட நிறுவனங்களில், சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் மகனால் தொடங்கப்பட்ட ஹில் கவுண்டி (பழைய பெயர்: மாய்டஸ்) என்னும் நிறுவனமும் ஒன்றாகும்.
கிடைத்த ஆவணங்களை ஆராய்ந்த பிறகு இந்நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட உள்ளது.