12 வயதான வெங்கடேசுக்கு வீர தீரத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
Bengaluru: கர்நாடகாவில் பெரும் வெள்ளம் காரணமாக பாலம் ஒன்று தண்ணீருக்குள் மறைந்தது. அந்த வழியே 6 உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்த ஆம்புலன்சுக்கு 12 வயது சிறுவன் வழி காட்டினான். இதன் மூலம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில் சிறுவனுக்கு வீர தீரத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
ராய்ச்சூர் மாவட்டம் ஹிரேரா யானகும்பி கிராமம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுவன் வெங்கடேஷ் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். வெள்ளத்தில் செல்ல ஆம்புலன்ஸ் திணறியபோது, அதன் ஓட்டுனர் வழிகாட்டுமாறு சிறுவனை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதையடுத்து தண்ணீருக்குள் விழுந்தடித்து சிறுவன் வெங்கடேஷ் ஆம்புலன்ஸ் செல்வதற்கான பாதையை காண்பித்துக் கொடுத்தார். இதனால் வெள்ளத்தில் ஊர்ந்தவாறு ஆம்புலன்ஸ் சென்று மறு முனையை அடைந்தது.
இந்த சம்பவத்தை அங்கிருந்தவர் மொபைலில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்தன.
இந்த நிலையில் சுதந்திர தினமான இன்று வெங்கடேசுக்கு வீர தீரத்திற்கான விருது வழங்கப்பட்டது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 60-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 60 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.