தற்போது மீட்கப்பட்ட சிறுவன், இந்த பிரச்சனை முடியும் வரை சிறுவர்கள் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளான்.
Nagapattinam: தமிழத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது. நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும், புயல் சீற்றத்தில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர்.
புயலால், நெற்பயிர்கள், தென்னை, வாழை மரங்கள் முற்றிலுமாக அழிந்தன. அதுபோல பல குடிசை வீடுகளும் முற்றிலும் சேதம் அடைந்தன. இப்படி சேதமடைந்த வீடுகளை சீரமைக்கும் பணிகளில் தற்போது மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சை பட்டுகோட்டையை சேர்ந்த கூலித் தொழிலாளியான மாரிமுத்து என்பவர், தனது குடிசை வீட்டை சீரமைக்க பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவர் தனது மகனை தற்காலிகமாக விற்று பணம் பெற்றுள்ளார்.
நாகை மாவட்டம் பனங்குடியை சேர்ந்த சந்துரு என்பவரது பண்ணையில் சிறுவன் கடந்த 20 நாட்களாக கொத்தடிமையாக வேலை பார்த்து வந்துள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்துள்ளது. தகவலின் பேரில், கடந்த 22-ந்தேதி மாவட்ட அரசு அதிகாரிகளும், சைல்டு லைன் உறுப்பினர்களும் அந்த பண்ணைத் தோட்டத்துக்கு சென்று அதிரடி ஆய்வு செய்தனர்.
இதில், சிறுவன் கொத்தடிமை போல இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த சிறுவனை அதிகாரிகள் மீட்டனர். பிறகு அந்த சிறுவன் நாகை உதவிக் கலெக்டர் கமல்கிஷோர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
இதையடுத்து தற்போது அந்த சிறுவன் நாகையில் உள்ள சிறுவர்கள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டான். இதனிடையே சிறுவமனை கொத்தடிமையாக வைத்திருந்த பண்ணைத் தோட்ட உரிமையாளர் சந்துரு மீது நாகூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.