போலீசாரால் சிறுமி அழைத்துச் செல்லப்படும் காட்சி.
Thiruvananthapuram/ New Delhi: சபரிமலைக்கு ஐயப்ப சாமியை தரிசிக்க செல்ல முயன்ற 12 வயது சிறுமியை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். போலீசாருடன் சிறுமியின் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.
இளஞ்சிவப்பு வண்ண உடையணிந்திருந்த சிறுமியை கோயிலில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பம்பை முகாமுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அவர், சிறுமிதான் என்று அடையாள அட்டைகளை காண்பித்து போலீசாரை சமாதானப்படுத்த சிறுமியின் தந்தை மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
புதுச்சேரியை சேர்ந்த சிறுமியும் அவரது குடும்பத்தினரும் இன்று காலை 10 மணிக்கு சபரிமலைக்கு வந்துள்ளனர். அவர்களது அடையாள அட்டைகளை பரிசோதித்த காவலர்கள், சிறுமியை மட்டும் பம்பை முகாமுக்கு அனுப்பி விட்டு மற்ற குடும்ப உறுப்பினர்களை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல அனுமதித்தனர்.
சபரிமலைக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அதன் இறுதித் தீர்ப்பு வரும் வரையில் பெண்களை அனுமதித்திருக்கும் தீர்ப்பு செல்லுபடியாகும் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பெண்களை அனுமதிப்பதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு தங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கேரள அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
மண்டல பூஜைக்காக கடந்த சனிக்கிழமையன்று சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. எதிர்வரும் 41 நாட்களுக்கு கோயில் திறந்திருக்கும். நடை திறப்பதற்கு முன்பாக ஆந்திராவை சேர்ந்த பெண்கள் 10 பேர் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பி அனுப்பினார்கள்.