அமெரிக்க அரசின் நடவடிக்கை இந்திய மாணவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Washington: விசா மோசடி செய்து அமெரிக்காவில் தங்கியது தொடர்பாக 129 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான பல்கலைக் கழகத்தை பதிவு செய்துவிட்டு அவர்கள் அமெரிக்காவில் தங்கியிருந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை மீட்க மத்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 24 மணி நேரமும் அமெரிக்காவில் செயல்படும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
cons3.washington@mea.gov.in. என்ற மின்னஞ்சலுக்கு கைதானவர்களின் பெற்றோர் தொடர்பு கொள்ளலாம். இந்த விவகாரத்தை கவனிக்க தனி பிரிவை வெளியுறவு அமைச்சகம் ஏற்படுத்தியிருக்கிறது. அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது சுமார் 600 மாணவர்கள் மத்தியில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
அமெரிக்காவில் விசா மோசடிகள் அதிகரித்து வந்ததை தொடர்ந்து, அதில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக போலீசார் பொறி வைத்தனர். இதற்காக போலியான பல்கலைக் கழகம் ஒன்று போலீசாரால் தொடங்கப்பட்டது. இதில் பலரும் பதிவு செய்து கொண்டு விசா மோசடியில் ஈடுபட்டனர். இந்த பல்கலைக் கழகத்தில் நடத்தப்படும் பாடங்கள் சட்ட விரோதமானவை என்று தெரிந்தும் அதில் பல மாணவர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்தனர்.
இதையடுத்து போலி பல்கலைக் கழகத்தில் சேர்ந்த மாணவர்களை நேற்று முன்தினம் கைது செய்தனர். கைதான 130 பேரில் இந்தியர்கள் மட்டும் 129 பேர் என்பது தெரியவந்தது.