This Article is From Mar 02, 2020

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்!

பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீதான தண்டனை விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வறைக்குள் துண்டுச்சீட்டு வைத்திருத்தல், விடைக் குறிப்புகளை வைத்திருத்தலில் ஈடுபட்டால் தேர்வெழுத அனுமதி மறுக்கப்படும். 

Advertisement
தமிழ்நாடு Edited by

2019-20-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி வருகிற 24ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 7,276 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகின்றனர். 

2019-20-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி வருகிற 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. பழைய பாடத்திட்டத்தின்படி ஒரு பாடத்துக்குத் தலா 200 மதிப்பெண்கள் வீதம் 1200 மதிப்பெண்களுக்கு 10 ஆயிரத்து 683 தனித் தேர்வர்கள், புதிய நடைமுறையில்5,828 பேரும், புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2,655 பேரும் என மொத்தம் 19 ஆயிரத்து 166 தனித் தேர்வர்கள் சேர்த்து மொத்தம் 8 லட்சத்து 35 ஆயிரத்து 525 மாணவ மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.

இதற்காகத் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதுமாக மொத்தம் 3 ஆயிரத்து 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 68 புதிய மையங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளது. தமிழ் வழியில் படித்துத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 4 லட்சத்து 54 ஆயிரத்து 367 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுத உள்ளனர்.

வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகிறார்கள்.

Advertisement

தேர்வு அறைகளில் மாணவர்களைக் கண்காணிக்க 42,000 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 24ம் தேதி வரை பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10, 11, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீதான தண்டனை விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வறைக்குள் துண்டுச்சீட்டு வைத்திருத்தல், விடைக் குறிப்புகளை வைத்திருத்தலில் ஈடுபட்டால் தேர்வெழுத அனுமதி மறுக்கப்படும். 

Advertisement

காப்பி அடித்தலில் ஈடுபடும் மாணவர்களுக்குத் தேர்வெழுத இரண்டாண்டுகளுக்குத் தடை விதிக்கப்படும். வினாத்தாளை வெளியிடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும். வினாத்தாளில் விடைகளை எழுதித் தூக்கி எறிபவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும் எனக் கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

Advertisement