இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த ஜூலை 9 ஆம் தேதி, மூவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
Chennai: தமிழகத்தில் ‘அஸ்னருல்லா' என்கிற தீவிரவாத அமைப்பைத் தொடங்க திட்டமிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ தகவல் தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக சவுதி அரேபியா அரசு, இந்தியாவிடம் 14 பேரை ஒப்படைத்தது. அவர்களைத்தான் என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 பேரும் சென்னைக்கு சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். பூந்தமல்லியில் இருக்கும் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில், 14 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
என்.ஐ.ஏ அமைப்பின் வாதத்தைக் கேட்ட சிறப்பு நீதிபதி செந்தூர் பாண்டியன், குற்றம் சுமத்தப்பட்டவர்களை ஜூலை 25 ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
‘அஸ்னருல்லா' என்கிற தீவிரவாத அமைப்பை உருவாக்க, குற்றம் சாட்டப்பட்டுவர்கள் நிதி திரட்டி வந்ததாகவும் சமீபத்தில்தான் அவர்கள் சவுதி அரேபியாவுக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய ஹாசன் அலி மற்றும் ஹாரிஷ் முகமது ஆகியோரை கடந்த சனிக்கிழமை கைது செய்ததாக என்.ஐ.ஏ தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், தீவிரவாத அமைப்பை உருவாக்க உள்ளூரில் வேலை செய்து வந்த குழுவையும் மடக்கிப் பிடித்துள்ளதாக என்.ஐ.ஏ சொல்கிறது.
இது தொடர்பாக சென்னை மற்றும் நாகையில் தீவிர தேடுதல் வேட்டையில் என்.ஐ.ஏ ஈடுபட்டு வந்தது. இதைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்டுள்ள இரு மாவட்டங்களில் சில நாட்களுக்கு முன்னர் சந்தேகத்திற்குரிய மூவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பபட்டுள்ளது.
“அஸ்னருல்லா தீவிரவாத குழு”-வை உருவாக்கி, குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர்கள், இந்திய அரசு மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்ததாக என்.ஐ.ஏ செய்திக் குறிப்பு வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.
அதில் மேலும், “எங்களுக்குக் கிடைத்த தகவல்கள்படி, குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள், பெரும் அளவிலான நிதியைப் பெற்று, இந்தியா மீது தாக்குதல் நடத்த தயாராகி வந்துள்ளனர். இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கத்தான் அவர்கள் முயற்சி மேற்கொண்டிருந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த ஜூலை 9 ஆம் தேதி, மூவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த சயீத் புகாரி (குற்றம் சுமத்தப்பட்டவர் 1), ஹாசன் அலி யூனஸ்மாரிக்கர் (குற்றம் சுமத்தப்பட்டவர் 2) மற்றும் முகமது யூசஃபுதீன் ஹரிஷ் முகமது (குற்றம் சுமத்தப்பவர் 3) ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மற்ற இருவர் நாகையைச் சேர்ந்தவர்கள்.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் வீட்டில் சோதனை செய்த என்.ஐ.ஏ அமைப்பு, 9 மொபைல் போன்கள், 15 சிம் கார்டுகள், 7 மெமரி கார்டுகள், 3 லேப்டாப்கள், 5 ஹார்டு டிஸ்குகள், 6 பென் டிரைவ்கள், 2 டேப்லட்கள், 3 சிடி/டிவிடி-க்கள், ஆவணங்கள், இதழ்கள், பதாகைகள், நோட்டிஸ், போஸ்டர்கள், புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது குற்றம் சுமத்தப்பட்ட மூவரிடமும் என்.ஐ.ஏ விசாரணை செய்து வருகிறது.