காரணமின்றி வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் - முதல்வர் நாராயணசாமி
ஹைலைட்ஸ்
- புதுச்சேரியில் இன்று மாலை முதல் மார்ச்.31ம் தேதி வரை 144 தடை
- கொரோனா விவகாரத்தில் புதுச்சேரி மக்கள் அலட்சியமாக உள்ளனர்.
- வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
புதுச்சேரியில் இன்று மாலை முதல் மார்ச்.31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் வகையில், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில் சேவைகள், மெட்ரோ ரயில் சேவைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில், மார்க்கெட்டுகள், மால்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி மையங்கள் உள்ளிட்டவைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.
இந்தியாவில் 400க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 80 மாவட்டங்கள் முடக்கப்படுவதாக மத்திய அரசு நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தது. அதிகபட்சமாக கேரளா மற்றும் மகாராஷ்ட்டிராவில் 10 மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, புதுச்சேரியில் இன்று மாலை முதல் மார்ச்.31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, "கொரோனா வைரஸ் பரவலை தடுக்க புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 144 தடை விதிக்கப்பட்டும், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கொரோனா விவகாரத்தில் புதுச்சேரி மக்கள் அலட்சியமாக உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வருகின்ற 31-ம் தேதி வரை பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். வீட்டில் இருந்து வெளியே செல்லும் பொதுமக்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31-ம் தேதி வரை தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உணவகங்களில் சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் வாங்க மட்டும் அனுமதி.
'ஸ்விக்கி', 'சொமோட்டோ' உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கும் மார்ச் 31-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளும் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காரணமின்றி வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும், பால், காய்கறிகள், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், மளிகை கடைகள் மட்டும் திறந்திருக்கும். இருசக்கர வாகனங்களில் யாரும் வெளியே செல்லக் கூடாது என்ற அவர் கூறியுள்ளார்.