India COVID-19 Cases: கொரோனா பரவலை கட்டுபடுத்த இந்தியா தற்போது 21 நாள் ஊரடங்கில் உள்ளது.
New Delhi: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 149 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000ஐ கடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது பாதிப்பு எண்ணிக்கையிலும், உயிரிழப்பு எண்ணிக்கையிலும் மிகப்பெரிய அளவிலான உயர்வாகும்.
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர, பிரதமர் நரேந்திர மோடி ஏப்.14ம் தேதி வரை நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார். எனினும், கொரோனா வைரஸ் பரவல் கணிசமான அளவில் உயர்ந்தே வருகிறது. இந்நிலையில், பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களும், ஊரடங்கை நீட்டிப்பதற்கே பரிந்தரைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, மாநிலங்களின் முன்மொழிவுகளை பரிசீலிப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தேசத்தின் நலனை கருதி சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
இதுதொடர்பாக தெலுங்கானா மாநில அமைச்சர் கே.டி.ராமராவ் என்டிடிவியிடம் கூறியதாவது, ஜூன்.1ம் தேதி வரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், ஜூன் 3ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்கலாம் என்று பரிந்துரைத்த பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் ஆய்வை மேற்கோள் காட்டி, தெலுங்கானாவும் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைப்பதாக தெரிவித்தார்.