Coronavirus Outbreak: கொரோனா வைரஸின் அறிகுறிகள் 2 முதல் 14 நாட்களுக்கு இடையில் எந்த நேரத்திலும் வெளிப்படலாம்.
ஹைலைட்ஸ்
- இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்களுக்குத்தான் கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல்
- கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்
- உலக அளவில் கொரோ வைரஸ், வேகமாக பரவிவருகிறது
New Delhi: Coronavirus Outbreak: பேடிஎம் ஊழியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, குர்கானில் உள்ள அந்த நிறுவனம் அதன் அலுவகத்தை இரண்டு நாட்கள் மூடுவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 29வது நபர் பேடிஎம் ஊழியர் ஆவார்.
இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதே இந்த எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம். இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வரும் விமான நிலையங்களுக்கு வரும் அனைத்து பயணிகளையும் சோதனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்சா தனது 750 விமானங்களில் 150 விமானங்களை தரையிறக்க முடிவு செய்து அதன் விமான போக்குவரத்தை 25 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது. சீனாவில் வுஹான் பகுதியில் உருவான இந்த கொரோனா வைரஸ் பாதிப்பானது 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகளவில் இந்த வைரஸ் 90,000 பேரை பாதித்துள்ளது, அதில், 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக பேடிஎம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள எங்கள் ஊழியர் அண்மையில் இத்தாலி சென்று திரும்பினார். இதைத்தொடர்ந்து, அடுத்த 2 நாட்களுக்கு ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து பணி செய்யுமாறு அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த மாதம் இத்தாலியில் இருந்து ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த 23 பேர் கொண்ட குழுவினரை சேர்ந்தவர்கள் தான் தற்போது வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள 16 பேரும். தற்போது இவர்கள் அனைவரும் டெல்லியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். மேலும், மற்ற இருவரும் ஜெய்ப்பூரில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக குறிப்பிட்ட 12 நாடுகளில் மட்டுமல்லாமல், சர்வதேச விமானங்களில் இருந்து நாட்டில் தரையிறங்கும் அனைத்து பயணிகளையும் தீவிரமாக சோதனை செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2 மாதத்தில் மட்டும், 21 விமான நிலையங்களில் 5,89,000 மக்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய தற்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இதற்காக இத்தாலி, இரான், தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சீனா, இரான், தென்கொரியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு மக்கள் பயணம் செய்ய வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதேபோல், மற்ற இதர நாடுகளுக்கும் தேவையில்லாத பயணத்தை தவிர்க்குமாறும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்ந்து, கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு பள்ளிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 28 நாட்களில் பள்ளியில் ஊழியர்கள் அல்லது மாணவர்கள் யாரெனும், கொரோனா பாதிப்புக்கு உள்ளான நாடுகளுக்கு பயணம் செய்து வந்தவர்களும் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், எதேனும் அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.