Lucknow: உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 48 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக இதுவரை 16 பேர் இறந்துள்ளனர்.
ஷாஜஹான்பூர்தான் இந்த மழையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் மட்டும் 6 பேர் இறந்துள்ளனர். குவாலியர் விமான தளத்திலிருந்து, மீட்புப் பணிகளுக்காக விமானங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதுவரை லலித்பூர் மற்றும் ஜான்சி மாவட்டங்களிலிருந்து 14 பேரை விமானம் மூலம் மீட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சீதாபூர் மாவட்டத்தில் 3 பேரும், அமேதி மற்றும் ஆவுரேயே மாவட்டங்களில் 4 பேரும் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 461 வீடுகள் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜான்சி மாவட்டத்தில் கனமழை பெய்ததை அடுத்து, எரச் அணைக்கு அருகில் இருக்கும் ஒரு தீவில் 8 மீனவர்கள் தஞ்சம் அடைய நிர்பந்திக்கப்பட்டனர். அவர்களை விமானப் படை காப்பாற்றியுள்ளது.
கேரளாவில் சமீபத்தில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது உத்தர பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. கேரள வெள்ளத்துக்கு 350-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அம்மாநில அரசு வெள்ளத்தால், 19500 கோடி ரூபாய் அளவுக்குச் சேதாரம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளது.