New Delhi: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் நெருக்கடி காரணமாக முடக்கியிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று தொடங்கியுள்ளன. இந்நிலையில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 12 பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், 2 ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள், ராஷ்டிரிய லோகாந்த்ரிக் கட்சி, திமுக, சிவசேனா ஆகிய கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என மொத்தமாக 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லோக் சபா உறுப்பினர்களுக்கான கொரோனா பரிசோதனை என்பது நேற்றும் இன்றும் நடைபெற்றது.
முன்னதாக பாஜக எம்.பி சுகந்த மஜும்தார் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக நேற்று டிவிட் செய்திருந்தார்.
தற்போது உள்ள 785 எம்பிக்களில் 200 எம்பிக்கள் 65 வயதிற்கு அதிகமானவர்களா உள்ளனர்.
முன்னதாக, குறைந்தது ஏழு மத்திய அமைச்சர்கள் மற்றும் சுமார் 25 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இந்த நோயைக் கொண்டிருந்தனர். அவர்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இருந்தார், அவர் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு முழுமையான மருத்துவ பரிசோதனை செய்தார்.
கொரோனா தொற்று காரணமாக ஒரு எம்பியும் சில எம்எல்ஏக்களும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.