This Article is From Nov 17, 2018

தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக உள்ளது: தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்!

தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக உள்ளது: தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றம் செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சித்தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்ட போது, தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜியும், நீதிபதி எம்.சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.

இதனால் வழக்கு 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என கடந்த அக்.25ல் தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து, அந்த தீர்ப்பின் சாராம்சம் 475 பக்கங்களில் இடம்பெற்றிருந்தது. இந்த தீர்ப்பின் நகல் சமீபத்தில் சட்டசபை செயலாளர் சீனிவாசனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதனையடுத்து 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம் எழுதியுள்ளது. தீர்ப்பு நகலை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது.

அதன் அடிப்படையில், குறிப்பிட்ட 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபடும். ஏற்கனவே காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 2 தொகுதிகள் உட்பட, 20 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக வலுத்து வருகிறது.

இந்நிலையில், விரைவில் இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.