Tamil Nadu: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரிலிருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த கோர விபத்தில், 3 பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் கூறும்போது, கர்நாடகாவின் பெங்களூர் பகுதியிலிருந்து எர்ணாகுளம் நோக்கி வந்து கொண்டிருந்த கேரள மாநில சொகுசு பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் கூறும்போது, உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காட்சிகளில், பேருந்தின் வலது புறம் முற்றிலும் சிதைந்துள்ளது. கண்டெயனர் லாரியின் டயர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிவேகமாகச் சென்ற லாரியின் டயர் வெடித்ததைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்து மீது மோதியதாகத் தெரிகிறது.
இது சம்பந்தமான அனைத்து நிவாரண நடவடிக்கைகளும் தமிழக அரசு மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும்" என்று முதல்வர் பினராயி விஜயன் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நரிப்பள்ளம் பகுதியில் சுற்றுலா பேருந்தும் ஆம்னி பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்கள் நேபாள நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.