This Article is From Oct 26, 2018

‘உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்!’- தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி

தீர்ப்பினால், தமிழக சட்டப்பேரவையின் பலம் 234-ல் இருந்து 214 ஆக குறைந்துள்ளது.

‘உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்!’- தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி

நீதிபதி சத்யநாரயணன் ஆளுங்கட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், ஏற்கெனவே காலியாக இருக்கும் 2 தொகுதிகளை சேர்த்து, 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது

அதிமுக-விலிருந்து 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் இன்று செய்திளார்களை சந்தித்து பேசினார்கள்.

அதிமுக-வில் சென்ற ஆண்டு, சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈ.பி.எஸ் அணி பிரிந்தது. சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் அணி தனியாக சென்றது. சிறிது காலம் கழித்து ஓ.பி.எஸ் அணியும் ஈ.பி.எஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. ஆனால், தினகரனுக்கு நெருக்கமாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் எடப்பாடிக்கு எதிராக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம், கடிதம் அளித்தனர். அந்தக் கடிதத்தில், 'முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என்று கூறினர்.

முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர் என்ற காரணத்தை முன் வைத்து, 18 எம்.எல்.ஏ-க்களையும் தன் அதிகாரத்தை வைத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்தார் தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

அதில் இரு வேறு தீர்ப்புகள் வரவே, மூன்றாவது நீதிபதியான சத்யநாரயணனன் வழக்கை விசாரித்தார். வழக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தீர்ப்பில் நீதிமன்றம், '18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது செல்லும்' என்று கூறியுள்ளது.

நீதிபதி சத்யநாரயணன் ஆளுங்கட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், ஏற்கெனவே காலியாக இருக்கும் 2 தொகுதிகளை சேர்த்து, 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.

தீர்ப்பினால், தமிழக சட்டப்பேரவையின் பலம் 234-ல் இருந்து 214 ஆக குறைந்துள்ளது. இதில் பெரும்பான்மையைப் பெற 107 பேரின் ஆதரவு தேவைப்படும். அதிமுக-வுக்கு தற்போது 116 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது. 

இந்நிலையில் இன்று, தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் செய்தியாளர்களை சந்தித்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள், ‘சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் பல பின்னடைவுகள் இருப்பதாக எங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் 30 முதல் 90 நாட்களுக்குள் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்

இந்த முடிவுக்கு எங்கள் அமைப்பின் தலைவர் டிடிவி தினகரன் சம்மதம் தெரிவித்துள்ளார். அதேபோல, எங்கள் 18 பேருக்கும் இந்த முடிவு குறித்து மகிழ்ச்சியே. தமிழக சபாநாயகர் இந்த விவகாரத்தில் தவறிழைத்துவிட்டார் என்பதை நாங்கள் கூடிய விரைவில் நிரூபிப்போம்'  என்று தகவல் தெரிவித்துள்ளார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.