Read in English বাংলায় পড়ুন
This Article is From Aug 09, 2018

கேரளாவில் கடும் மழை: 20 பேர் பலி; கொச்சியில் 2 மணி நேரம் விமானங்கள் தரையிறங்குவது பாதிப்பு

இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளதால், 26 ஆண்டுகள் கழித்து இடுக்கி அணையில் இருந்து வெள்ளோட்டமாக முன்பே நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Advertisement
தெற்கு (with inputs from Agencies)

Highlights

  • ஓடுபாதையில் வெள்ளம் ஏற்படலாம் என கொச்சி விமான நிலைய அதிகாரிகள் அச்சம்.
  • கொச்சியில் விமானங்களின் தரையிறக்கம் நிறுத்தப்பட்டது.
  • எர்ணாகுளம் மாவட்டத்தின் இரு கிராமங்களில் நிவாரண முகாம்கள் அமைப்பு.
Thiruvananthapuram:

கேரள மாநிலம் முழுவதும் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் இருபது பேர் இறந்துள்ளனர். இடுக்கியில் பதினொரு பேரும், மலப்புரத்தில் அறுவரும், கோழிக்கோட்டில் இருவரும், வயநாட்டில் ஒருவரும் இதுவரை மழைக்குப் பலியாகி உள்ளனர். பாலக்காடு, வயநாடு, கோழிக்கோடு பகுதிகளில் பலரைக் காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக மத்திய படைகளின் உதவியை மாநில அரசு கோரியுள்ளது.

இதனிடையே, இடுக்கி அணையில் இருந்து இன்று நீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் கொச்சி விமான நிலைய ஓடுபாதையில் நீர் தேங்கும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதன் காரணமாக அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களின் தரையிறக்கம் இரண்டு மணி நேரத்துக்கு தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டது. பிற்பகல் இரண்டரை மணி வரை பல விமானங்களும் அருகில் உள்ள வேறு நகரங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. பிரச்சினை இல்லை என்றபோதிலும் 2013ஆம் ஆண்டு ஓடுபாதையில் வெள்ளம் ஏற்பட்டதைக் மனதில்கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது. மூன்று மணியிலிருந்து தரையிறக்கம் மீண்டும் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகிறது. கொச்சியில் இருந்து புறப்படும் விமானங்களைப் பொறுத்தமட்டில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

கேரளத்தில், வரலாறு காணாத வகையில் நீர்மட்டம் உயர்ந்ததால் கடந்த மூன்று வாரங்களில் 22 அணைகள் திறந்துவிடப்பட்டன. இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் 26 ஆண்டுகள் கழித்து இப்போது அதிலிருந்து வெள்ளோட்டம் பார்க்க முன்பே நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Advertisement

செறுதோணி அணையில் இருந்து வரும் நீர் பெரியாற்றை அடைந்தால் அங்கு நீர்மட்டம் மேலும் உயரும் என்று தெரிகிறது. இடுக்கி அணையில் இருந்து வருகின்ற நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எர்ணாகுளம் மாவட்டத்தில் நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. இடுக்கியின் அடிமாலி நகரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாகி உள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரை உள்ளூர் மக்களும் போலிசாரும் சேர்ந்து உயிருடன் மீட்டனர்.

தாழ்வான பல பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மைப் படையைச் சேர்ந்த இரு அணிகள் கோழிக்கோட்டில் மீட்புப் பணிகளில் ஈடுபடச் சென்றுள்ளனர். மேலும் இரு அணிகளும் வடகேரளத்தில் மீட்புப் பணிகளுக்காக மத்திட அரசிடம் கோரப்பட்டுள்ளது. வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் உள்ள நிலவரத்தைக் கருத்தில் கொண்டு இராணுவத்தின் உதவியையும் மாநில அரசு நாடியுள்ளது. வயநாட்டில் சிக்கியுள்ள மக்களை மீட்க கப்பற்படையின் உதவியை நாடியுள்ளோம் எனவும் கேரள முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். எர்ணாகுளத்தில் உள்ள இடமலையாறு, கோழிக்கோட்டில் உள்ள காக்கயம் அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதிகளில் நிலைமை தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
Advertisement