Read in English
This Article is From Jun 08, 2020

குஜராத்தில் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா; சொகுசு விடுதிகளில் காங்., எம்எல்ஏக்கள்!

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில் பாஜகவில் மட்டும் 103 உறுப்பினர்கள் உள்ளனர், அங்கு ஒரு வேட்பாளர் வெற்றி பெற 34 வாக்குகள் தேவை.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • குஜராத்தில் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா
  • சொகுசு விடுதிகளில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கவைப்பு
  • மாநிலங்களவை தோ்தல் மீண்டும் வருகிற 19ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
New Delhi:

குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ராஜஸ்தானில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் அமைந்துள்ள வைல்ட் விண்ட்ஸ் என்ற ரிசார்ட்டுக்கு 26 எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் கட்சி தங்கவைக்கும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. எம்எல்ஏக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டால், பாஜக தலையீட்டிலிருந்து அவர்களை பாதுகாக்கலாம் என்று கட்சித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குஜராத்தில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்துவருகின்றனர். நான்கு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

அப்போது, குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனிடையே, மாநிலங்களவை தேர்தல் மீண்டும் வருகிற 19ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. 

Advertisement

இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் 3 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இது காங்கிரஸ் கட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

உறுப்பினர்களின் தொடர் ராஜினாமா காரணமாக, மாநிலத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 65ஆக குறைந்தது. இதைத்தொடர்ந்து, எம்எல்ஏக்களில் சிலர் ஏற்கனவே வெவ்வேறு ரிசார்ட்டுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில் பாஜகவில் மட்டும் 103 உறுப்பினர்கள் உள்ளனர். அங்கு ஒரு வேட்பாளர் வெற்றி பெற 34 வாக்குகள் தேவை. இதனால் மொத்தமுள்ள 4 மாநிலங்களவை இடங்களில் இரண்டில் வெற்றி பெறுவது கூட கடினம் என்ற நிலை காங்கிரஸ் கட்சிக்கு உருவாகியுள்ளது. 

Advertisement

சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர் ராஜினாமாவுக்கு ஆளும் பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. 

மத்திய அரசின் "ஆத்மா-நிர்பர் பாரத்" பிரச்சாரத்தை விமர்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், "பண பலத்தின் உதவியுடன் பாஜக மேற்கொள்ளும் சுயசார்பு இதுவே" என்று அவர் விமர்சித்துள்ளார்.

Advertisement