This Article is From Nov 30, 2018

‘2.0’- ஹிட்டா… மிஸ்ஸா..? - திரைப்பட விமர்சனம்! - 2.0 Movie Review

‘சிவாஜி’, ‘எந்திரன்’ திரைப்படங்களுக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஷங்கர் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் ‘2.0’

‘2.0’- ஹிட்டா… மிஸ்ஸா..? - திரைப்பட விமர்சனம்! - 2.0 Movie Review

நடிகர்கள்: ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன்

இயக்குனர்: ஷங்கர்

தயாரிப்பாளர்: லைகா

பாடல்கள்: ஏ.ஆர்.ரஹ்மான்

ரேட்டிங் – 2.5/5

‘சிவாஜி', ‘எந்திரன்' திரைப்படங்களுக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஷங்கர் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் ‘2.0'. 2010ஆம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தை, ‘லைகா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ளது. இந்தியசினிமாவின் costliest மூவி என விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 500 கோடி பொருட்செலவில் 3Dதொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது.

சென்னை மாநகரில் செல்ஃபோன்கள் திடீரென மாயமாவதும், செல்ஃபோன் கடை அதிபர் மற்றும் மொபைல் நெட்வொர்க் நிறுவனர் உள்ளிட்ட பலர் இறந்து போவதும்தொடரவே, அரசாங்கம் டாக்டர் வசீகரனின் உதவியை நாடுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்ட சிட்டி ரோபோட்டால் மட்டுமே இந்த சூழ்நிலையைகட்டுக்குள் கொண்டுவர முடியும் என முடிவு செய்து, சிட்டியை தயார் செய்கிறார்கள். செல்ஃபோன் உபயோகிப்பவர்கள் மீது இத்தனை கோபம் கொண்ட பக்ஷி ராஜன்யார்? ஏன் இதையெல்லாம் செய்கிறான்? சிட்டியும், வசீகரனும் எப்படி அவனை தடுக்கிறார்கள் என்பதே ‘2.0'

ahe61rfg

 

திரைக்கதை, பொழுதுபோக்கு அம்சங்கள் என எந்தவிதத்திலும் ‘எந்திரன்' படத்தின் முதல் பாகத்தில் கால்வாசி அளவிற்கு கூட ஈடுகொடுக்க முடியாமல் திணறுகிறது இந்த சுவாரஸ்யமற்ற இரண்டாம் பாகம். படம் தொடங்கி முதல் ஒரு மணிநேரம் வரை எந்தவிதத்திலும் ஆர்வத்தை தூண்டாத ‘2.0', சிட்டியின் அறிமுகத்திற்கு பின் கொஞ்சம் வேகமெடுக்கிறது. 15-20 நிமிடங்களில் முடித்திருக்கக்கூடிய விஷயங்களை ஒரு மணி நேரம் இழுத்திருக்கிறார்கள். அதன் பின் சட்டென இடைவேளை வந்துவிடவே, முதல் பாதியின் பெரும்பான்மை காட்சிகள் வறட்சியுடனே கடந்து முடிகிறது. முதல் பாதியை காட்டிலும் சற்றே ஆறுதலான இரண்டாம் பாதியில், ஒரு சில ரசிக்கத்தக்க காட்சிகள் உண்டு. இயக்குனர் ஷங்கரின் கேரியரிலேயே படு சுமாரான படம் என்று இப்படத்தை தாராளமாக சொல்லலாம். திருப்பங்கள் என்றோ ஆச்சர்யங்கள் என்றோ, படத்தில் எதுவுமே இல்லை. சமீப காலத்தில், இயக்குனர் ஷங்கர் திரைக்கதையைக் காட்டிலும் ஜிம்மிக்ஸ் விஷயங்களை மிக அதிகமாக நம்ப தொடங்கிவிட்டார் என்றே சொல்ல தோன்றுகிறது.

tiocvqv

படம் நெடுக ஒரு அந்நியத்தன்மை இருந்துகொண்டே இருக்கிறது; அதனாலேயே, எந்த இடத்திலும் நம்மால் படத்துடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை. அதன் விளைவாக, சில முக்கிய காட்சிகளில் கூட நமக்கு எவ்வித பதற்றமும் ஏற்படாமல் ‘சிட்டி மக்களை காப்பாற்றினால் என்ன,காப்பாற்றாமல் போனால் நமக்கென்ன' என்கிற ஒரு சோர்வே மிஞ்சுகிறது. தர்க்கரீதியாகவும் அக்ஷய் குமார் கதாபாத்திரம் செய்வதை முழுமையாக தவறென எடுத்துக்கொள்ள முடியாததால் (கிளைமாக்ஸ் தவிர), ஒரு நல்லவனும் நல்லவனும் மோதிக்கொளும் உணர்வே ஆங்காங்கே தோன்றுகிறது (தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட ஒரு விஷயத்தால் சமூகத்தின் மீதான கோபத்தோடு ‘அந்நியன்' படத்தில் அம்பியோ அல்லது ‘இந்தியன்' படத்தில் சேனாபதியோ செய்வதைத்தானே, இப்படத்தில் பக்ஷி ராஜனும் செய்கிறார். சட்டத்திற்கு புறம்பாக பிசினஸ் செய்யும் மொபைல் நெட்வொர்க் நிறுவனரில் தொடங்கி, ஒரு கட்டத்திற்கு மேல் அந்த கோபம் எல்லா மக்கள் மீதும் திரும்புகிறது). அதனாலும் கூட, படத்துடன் அதிகம் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை என்று கூறலாம். பார்த்து சலித்த வழக்கமான காட்சியமைப்புகளும், மொத்த படத்திலும் மனதில் நிற்கும்படி ஒரேயொரு வசனம் கூட இல்லாததும் மிகப்பெரிய குறை. முதல் பாதியில் வரும் பழிவாங்கல் காட்சிகள், அமைச்சர் கொல்லப்படும் காட்சியெல்லாம் ஏதோ ஒரு மோசமான மசாலா படம் பார்க்கும் உணர்வையே தருகிறது; இயக்குனர் ஷங்கர் அவர்களின் தரத்தில் அவை ஏதுமே இல்லை. புரொஃபசர் போராவின் மகன் கதாபாத்திரம் படுமொக்கையாக பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்தை எல்லாம் பார்க்கையில், எழுத்தாளர் ஜெயமோகன் போன்றோரின் பங்களிப்பு எல்லாம் இப்படத்தில் இருந்ததா இல்லையா என்கிற சந்தேகமே எழுகிறது.

9d97p79g

திரைப்படத்தை ஓரளவுக்கு காப்பாற்றுவது ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களும், அக்ஷய் குமாரின் ஃபிளாஷ்பேக்கும் (வழக்கமான பாணியில் இருந்தாலும் கூட), கடைசி அரைமணி நேர காட்சிகளும்தான். இரண்டாம் பாதியில் ஒரு சில காட்சிகளுக்கு பின் படம் மிரட்டலாக இருக்கப்போகிறது என நாம் நினைத்தால், அப்பொழுதும் கூட படு சுமாராகவே நகர்கிறது. படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் டெக்னிக்கல் அம்சங்கள் எல்லாம் பிரமாதமாக இருக்கிறது, அதற்காக படக்குழுவினர் கடும் உழைப்பை கொட்டியிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், படம் முடிந்து வெளியே வருகையில்'500 கோடி பட்ஜெட் படம்' ‘இந்தியாவின் costliest மூவி' என்ற விளம்பரங்களுக்கெல்லாம் சற்றும் நியாயம் செய்யவில்லை என்கிற உணர்வே ஏற்படுகிறது. படக்குழுவினர் டெக்னிக்கல் விஷயங்களில் காட்டிய முனைப்பில், 10 சதவிகிதமாவது திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்துவதிலும் காட்டியிருக்கலாம். மொத்த படத்தில் சிட்டியே நான்கைந்து காட்சிகளில்தான் வருகிறது. வில்லன் பழிவாங்கல் காட்சிகள் ஒரு மணிநேரம், சிட்டியின் அறிமுகம் கால் மணிநேரம், வில்லன் யார் என விவரிக்கும் ஃபிளாஷ்பேக் அரைமணிநேரம், வில்லனை எதிர்க்க கடைசி 40 நிமிடங்கள் என நீண்ட நெடிய எபிசோட்களாக மட்டுமே நகரும் படத்தில், நினைவில் நிற்கும்படியோ அல்லது பிரமாதமான விஷயம் என்றோ எதையும் குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை. கடைசி அரைமணிநேரத்தில் வரும் கிராஃபிக்ஸ் ஜாலங்களை ரசிக்க முடிகிறது, குழந்தைகளை அக்காட்சிகள் குதூகலப்படுத்தும்; ஆனால், அதை மட்டுமே நம்பி படத்தை எடுத்துவிட்டதாக தோன்றுகிறது. சண்டைக்காட்சிகளில் கூட, ரஜினி அவர்களின் முதிர்ச்சியால் பல இடங்களில் டூப் பயன்படுத்தியிருப்பது அப்பட்டமாக தெரிந்தது. கொஞ்சம் மெதுவாக ஓட தேவை இருக்கும் காட்சிகளில் கூட, ரொம்பவே சிரமப்பட்டு நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் அவர்களை பார்க்கவும் பரிதாபகரமாக இருந்தது.

சிட்டியாகவும், வசீகரனாகவும் ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் தனது பங்கினை சிறப்பாக செய்துள்ளார். இரண்டாம் பாதியில் தான் இல்லாத ஒரு அரைமணி நேர ஃபிளாஷ்பேக்கிற்கு அவர் ஒத்துக்கொண்டது, அவரது பெருந்தன்மை. ஆனால், பல காட்சிகளில் ரஜினி அவர்களின் மேக்-அப் ரொம்பவே மோசமாக தெரிந்தது. பக்ஷி ராஜனாக நிதானமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அக்ஷய் குமார். எமி ஜாக்சன் அழகு பதுமையாக வந்து செல்கிறார். நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு, படத்திற்கு பெரும்பலம் சேர்க்கிறது. படத்தின் பிரம்மாண்டத்திற்காக ஷங்கருக்கு இணையாக உழைத்தது ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா மற்றும் கலை இயக்குனர் முத்துராஜ் அவர்களாகத்தான் இருக்கமுடியும். படத்தில் வரும் ஒவ்வொரு செட்டும் மலைக்க வைக்கிறது. 3D தொழில்நுட்பமும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது; இந்திய சினிமாவின் முறையான முதல் 3D திரைப்படம் இது என பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். ஒரு சில காட்சிகளை தவிர, ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் பின்னணி இசை பல காட்சிகளில் ஏமாற்றத்தையே அளித்தது; வழக்கமான ரஜினி – ரஹ்மான் கூட்டணி அளவிற்கோ அல்லது ஷங்கர் – ரஹ்மான் கூட்டணி அளவிற்கோ எங்குமே கைகொடுக்கவில்லை (‘சிவாஜி', ‘எந்திரன்' படங்களை போல படம் முடிந்தும் முணுமுணுத்துக்கொண்டே வருவதைப் போல எந்தவொரு தீம் மியூசிக்கோ அல்லது பின்னணி இசையோ இல்லை).

மொத்தத்தில், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால், இரண்டாம் பாதியில் ஆங்காங்கே ‘2.0' படத்தை ரசிக்க முடியும்; 3D அனுபவத்தையும் ரசிக்கலாம். ஆனால், ஷங்கர் பட தரத்திலோ அல்லது முதல் பாகம் அளவிற்கோ எதிர்பார்த்து சென்றால், கடுப்படைந்துதான் திரும்ப வேண்டும். VFX இருந்தாலே போதும் என நினைக்க தொடங்கிவிட்டாரோ, ஷங்கர்?

‘வேலையில்லா பட்டதாரி 2', ‘விஸ்வரூபம் 2', ‘சாமி 2', ‘சண்டக்கோழி 2', ‘பில்லா 2', ‘காஞ்சனா 2' என நீளும் தமிழ் சினிமாவின் மோசமான sequelபட்டியலில் ‘எந்திரன் 2.0' படமும் இடம்பிடிக்கிறது.
 

.