Bharat Bandh Strike: பாரத் பந்த்தால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
Bharat Bandh: நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் இன்று முதல் 2 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்கு பல்வேறு தொழிற் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழகத்தில் இயல்பு நிலை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ. உள்பட மொத்தம் 10 அமைப்புகள் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ. 18 ஆயிரத்தை நிர்ணயிக்க வேண்டும், பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் உள்ளிட்டவை தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள் ஆகும்.
இந்த 2 நாட்கள் போராட்டத்தால் வங்கி பணிகள் கடுமையாக பாதிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 13 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது.
அவர்களுக்கு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை மற்றும் தனியார் துறையை சேர்ந்த அமைப்புகள் சில ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்திலும் போக்குவரத்து மற்றும் மின் வாரிய ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.
முன்னதாக போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வேலைக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்று கூறியிருந்தார். அதேநேரத்தில் வணிகர் சங்கங்கள் ஏதும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இதனால் தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவையை தவிர்த்து மற்றவைக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று தெரிகிறது.