ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது பயணத்தை நிறைவு செய்யும்போது இச்சம்பவம் நடந்துள்ளது
Tokyo, Japan: ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு வெளியே கத்திக் குத்து சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு பள்ளி மாணவி இறந்துள்ளார். கத்திக் குத்தில் ஈடுபட்ட நபரும் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார் என்று உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
காவாசாகி என்ற இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. மேற்குறிப்பிட்ட இருவரைத் தவிர 17 பேருக்கு காயம் ஏறப்பட்டுள்ளதாகவும் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தகவல் கூறுகிறது.
வளர்ந்த நாடுகள் பட்டியலில் ஜப்பானில் எப்போதும் வன்முறைச் சம்பவங்கள் மிகக் குறைவாகத்தான் நடக்கும். எனவே, இச்சம்பவம் உலகை மட்டுமல்லாமல் ஜப்பானையும் உலுக்கியுள்ளது.
ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது பயணத்தை நிறைவு செய்யும்போது இச்சம்பவம் நடந்துள்ளது. “பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரார்த்தித்துக் கொள்கிறேன். இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
இந்த திடீர் கத்திக் குத்து சம்பவத்துக்கு என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. ஜப்பான் அரசு தரப்பு அது குறித்து விசாரணை செய்து வருகிறது. எல்லோரும் பிஸியாக காலைப் பணிக்கு சென்று கொண்டிருக்கும் போது இச்சம்பவம் நடந்துள்ளது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
கத்திக் குத்து நடந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கத்திக் குத்தில் ஈடுபட்ட நபரை பிடித்த போலீஸ், அவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது. ஆனால், அவர் மரணமடைந்துள்ளார்.