திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலியாக அறிவிப்பு!
ஹைலைட்ஸ்
- திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலியாக அறிவிப்பு
- தமிழக சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் பலம் 98ஆக குறைந்தது.
- இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது
திமுக எம்எல்ஏக்கள் 2 பேர் மறைந்ததைத் தொடர்ந்து திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட காத்தவராயன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
காத்தவராயன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மத்திய மாவட்ட திமுக துணை செயலாளராகவும் இருந்துள்ளார். சிறிது காலமாக இருதய நோயால் அவதிப்பட்டு வந்த காத்தவராயன் ஒரு மாதத்திற்கு முன்புதான் அப்போலோ மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் மீண்டும் உடல்நிலை மோசமானதால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி பிப்.27ம் தேதி காலை அவர் உயிர் பிரிந்தது.
இதைத்தொடர்ந்து, பிப்.28ம் தேதி மறுநாளே திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் காலமானார். இப்படி, அடுத்தடுத்த நாளே 2 எம்.எல்.ஏக்கள் காலமானது திமுகவினரிடையே வேதனையை ஏற்படுத்தியது. இதன்மூலம் தமிழகச் சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் பலம் 98ஆக குறைந்தது.
தற்போதைய நிலையில் சட்டப்பேரவையில் கட்சிகளின் பலம்: பேரவைத் தலைவர் உள்பட அதிமுக - 125, திமுக - 98, காங்கிரஸ் - 7, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1, டிடிவி தினகரன் - 1 என 232 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
தொடர்ந்து, 15-வது சட்டப்பேரவையின் ஆயுட்காலம் ஓராண்டுக்கு மேலாக இருப்பதால் தற்போது காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு சட்டப்படி இடைத்தேர்தல் நடத்தலாம்.
ஆனால், 2021 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடக்க இருப்பதால் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு மிகக் குறைவாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விதிகளின்படி, 2 திமுக உறுப்பினர்கள் மறைவு தொடர்பான இறப்புக் கடிதத்தின் அடிப்படையில், இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாகச் சட்டப்பேரவை செயலகம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வாயிலாக இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பி உள்ளது.