Assam oil well fire: அசாமில் எண்ணெய் வயல் தீ விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!
Guwahati: அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் ஆயில் இந்தியா லிமிட்டெட்டுக்கு சொந்தமான எண்ணெய் வயலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி அந்நிறுவனத்தை சேர்ந்த 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணெய் கிணற்றில் கடந்த 2 வாரங்களாக எரிவாயு கசிவு ஏற்பட்டு வந்த நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆயில் இந்தியா செய்தித் தொடர்பாளர் திரிதிவ் ஹசாரிகா செய்தி நிறுவனமான பிடிஐயிடம் கூறும்போது, அவர்களின் உடல்கள் அந்த இடத்திற்கு அருகிலுள்ள ஈரநிலத்திலிருந்து மீட்கப்பட்டன. அவர்கள் தண்ணீரில் குதித்து மூழ்கி இறந்ததாகத் தெரிகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் சரியான காரணம் கண்டறியப்படும் "என்றார்.
சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி 1.5 கி.மீ சுற்றளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் எண்ணெய் கிணறு தொடர்ந்து எரிவாயுவை வழங்குவதால் அது இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது.
இந்திய விமானப்படை தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது, அதே நேரத்தில் என்.டி.ஆர்.எஃப் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவம் உதவி செய்து வருகிறது. இந்த பகுதி துணை ராணுவப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த எண்ணெய் வயல் நிபுணர்கள், நேற்று முன்தினம் இந்த எண்ணெய் வயலை பார்வையிட்டு எரிவாயு வெளியேற்றத்தை சரி செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினர்.
விபத்து ஏற்பட்டிருக்கும் எண்ணெய் கிணறு தலைநகர் கவுகாத்தியில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இங்கு கடந்த மே 27-ம்தேதி வாயுக் கசிவு ஏற்பட்டது.
தற்போது எண்ணெய் வயல் விபத்து தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணைய தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த எண்ணெய் வயலுக்கு 3 கிலோ மீட்டர் சுற்றளவில், திப்ரு சைகோவா தேசிய உயிரியல் பூங்கா மற்றும் உயிரின பாதுகாப்பு பூங்காக்கள் அமைந்துள்ளன. விபத்தால் இவற்றின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
வயல் வெளிகள் மற்றும் தேயிலை தோட்டங்களிலும் எரிவாயுவின் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அங்கு பணியாற்றும் தொழிலாளர்களும், விவசாயிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.
எண்ணெய் வயல் அமைந்திருக்கும் பகுதியில் இருந்து, 1.50 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று ஆயில் இந்தியா லிமிட்டெட் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து எரிவாயுக் கசிவை சரி செய்யுமாறு மத்திய அரசுக்கு மாநில முதல்வர் சர்வானந்த சோனாவால் கோரிக்கை வைத்துள்ளார்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை பார்வையிட்டு வருகின்றனர்.
விபத்து குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன், அசாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் நிலைமை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.