This Article is From May 09, 2020

துபாயில் இருந்து கேரளா திரும்பியவர்களில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!!

கொரோனா பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் கோழிக்கோடுவுக்கும், இன்னொருவர் கொச்சி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துபாயில் இருந்து கேரளா திரும்பியவர்களில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஹைலைட்ஸ்

  • துபாயில் இருந்து 300க்கும் அதிகமானோர் நேற்று கேரளா வந்தனர்
  • கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது
  • கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Thiruvananthapuram:

துபாயில் இருந்து கேரளா கொண்டு வரப்பட்ட இந்தியர்கள் 363 பேரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்கள் நேற்று முன்தினம் கேரளா கொண்டு வரப்பட்டனர்.

இன்றுகொரோனா பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் கோழிக்கோடுவுக்கும், இன்னொருவர் கொச்சி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதிய கொரோனா பாதிப்புகளால் கேரளாவில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 505 பேராக அதிகரித்துள்ளது. அவர்களில் 17 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். 

கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு 4 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். முன்னதாக கடந்த திங்கள் முதல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. 

சுமார் 1.70 லட்சம்பேர் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். வளைகுடாப் போருக்கு பின்னர், இப்படியொரு பெரும் மக்கள் நகர்வை இந்தியா எதிர்கொள்ளப்போகிறது.

அரசின் வழிகாட்டுதலின்படி இந்தியா கொண்டு வரப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும். பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தும் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதைத் தவிர்த்து வெப்பநிலையும் சோதிக்கப்படுகிறது. 

பாதிப்பு இல்லாவிட்டாலும் இந்தியா வருபவர்கள் 7 நாட்கள் அரசு தனிமைப்படுத்தும் முகாமில் சேர்க்கப்படுவார்கள். அதன்பின்னர் 7 நாட்கள் வீட்டில் அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 

.