ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தினால் இருவர் பலியாகியுள்ளதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறி 5 பேர் சரணடைந்துள்ளதாக போலீஸ் கூறியுள்ளது.
குண்டு வீச்சு சம்பவத்தில் இறந்தவர்கள் கார்த்தி மற்றும் விக்கி என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் இரட்டைக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்கள். இருவருக்கும் அந்த வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், கையெழுத்துப் போடுவதற்காக அவர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துள்ளனர்.
குண்டு வீசியவுடன், சம்பவ இடத்திலேயே கார்த்தி இறந்துவிட்டார். ஆனால் விக்கியை, குண்டு வீசிய கும்பல் துரத்திச் சென்று அடித்துக் கொன்றுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறி, பாஸ்கரன், முருகேசன், ரூபன், அர்ஜுன் மற்றும் முரளி என்கின்றவர்கள் போலீஸில் சரணடைந்துள்ளனர்.