சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அருகே இருசக்கர வாகனம் ஒன்று பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்து சம்பவத்தின் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், வேகமாக சென்று கொண்டிருக்கும் பேருந்துக்கும், இடது ஒரமாக சென்று கொண்டிருக்கும் இருசக்கர வாகனத்துக்கும், இருக்கும் இடைவெளியில் நுழைந்து அந்த பெண்கள் ஓட்டி வந்த வாகனம் முந்திச் செல்ல முயல்கிறது.
ஆனால், எதிர்பாராத விதமாக பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி மூன்று பெண்களும் பேருந்தின் சக்கரத்தில் சிக்குகின்றனர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்த விபத்தில் பேருந்துக்கு இடது ஒரமாக இருசக்கர வாகனத்தில் சென்றவரும் நிலை தடுமாறிய நிலையில், அதிர்ஷ்டவசமாக கீழே விழாமல் உயிர் தப்பினார்.
தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிண்டி போக்குவரத்து போலீசார் உயிரிழந்த 2 பெண்கள் உடலையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த மற்றொரு பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரே பைக்கில் 3 பெண்கள் சென்ற போது நிகழ்ந்த இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த பவானி, நாகலட்சுமி என்பதும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மகாலட்சுமி என்பதும் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்தது சென்னையின் முக்கியப் பகுதி என்பதாலும், காலை நேரம் என்பதாலும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, விபத்தில் சிக்கிய மாநகரப் பேருந்தை இயக்கி வந்த பேருந்து ஓட்டுநர் குணசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.