ஈராக்கில் பசுமை மண்டல பகுதி என்று அழைக்கப்படும் அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இரண்டு முறை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Baghdad, Iraq: ஈராக் தலைநகர் பாக்தாதில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பசுமை மண்டலத்தில் இரண்டு ஏவுகணைகள் வீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
நள்ளிரவுக்கு சற்று முன்பு, பாக்தாத்தில் AFP நிருபர்கள் இரண்டு உரத்த குண்டுவெடிப்பு சத்தத்தை கேட்டுள்ளனர், அதைத் தொடர்ந்து பசுமை மண்டலத்தின் பாதுகாப்பு சைரன்களும் ஒலி எழுப்பியுள்ளன.
ஈராக்கில் பசுமை மண்டல பகுதி என்று அழைக்கப்படும் அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இரண்டு முறை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட வெளிநாட்டு தூதரகங்கள் ஆகியன அமைந்துள்ள அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈராக்கில் உள்ள அமெரிக்க படை வீரர்கள் தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய 24 மணி நேரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. முன்னதாக நடந்த தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ஈரான் அறிவித்தது. ஆனால், இதை மறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எங்கள் நாட்டு வீரர்கள் யாருக்கும் ஈரானின் தாக்குதலில் ஏற்படவில்லை என்று கூறினார்.
கடந்த வாரம் ஈராக் தலைநகர் பாக்தாத் வந்திருந்த இடத்தில், ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானியை அமெரிக்கா அதிரடியாக வான்தாக்குதல் நடத்தி கொன்றது. பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நடந்த ஏவுகணைத் தாக்குதல்களின் பின்னணியில் ஹஷேத் குழுக்கள் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.