சிஎஸ் லிபி என்கின்ற கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளரான பெண், தனது முகநூலில் சபரிமலையில் ஏறி, ஐயப்பன் கோயிலுக்குப் போகப் போவதாக பதிவிட்டுள்ளார்
Thiruvananthapuram: சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்னர் தீர்ப்பளித்தது. இன்று ஐயப்பன் கோயில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் சபரிமலையில் ஏற கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும், ஆந்திராவைச் சேர்ந்த இன்னொரு பெண்ணும் வந்துள்ளனர். அவர்களை கோயிலுக்குள் செல்லக் கூடாது என்று கோரி போராட்டம் நடத்தியவர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
சிஎஸ் லிபி என்கின்ற கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளரான பெண், தனது முகநூலில் சபரிமலையில் ஏறி, ஐயப்பன் கோயிலுக்குப் போகப் போவதாக பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவைப் பார்த்த போராட்டக் காரர்கள், லிபியையும் அவரது நண்பர்களையும் மலையில் ஏறிய சில நிமிடங்களில், மறித்து வந்த வழியே திருப்பி அனுப்பியுள்ளனர்.
தனது முகநூலில் லிபி, ‘நாத்திகவாதியான நானும், எனது 4 பெண் தோழிகளும் சபரிமலைக்குப் போகப் போகிறோம்’ என்று தெரிவித்திருந்தார். சபரிமலைக்கு வந்த லிபி மற்றும் அவரது நண்பர்களை போராட்டக்காரர்கள் சூழ்ந்தனர். அதே நேரத்தில் போலீஸார் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.